Monday, June 15, 2020

“இந்த பூமி செத்துவிட்டது”

அண்ணன் Murali Appas மிக அழகாகச் சொல்வார், இறைவன் படைப்பிலேயே அழுகிய ( Rotten Stage) நிலையில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது இந்தப்பூமிப்பந்துதான்...

அதற்கு அவர் கூறும் காரணம், அழுகிய பழத்தை எடுத்துக்கொண்டால் கூட அதில் இருந்து நீர் உற்பத்தியாகும்.

உற்பத்தியான நீரில் இருந்து பேக்டீரியாக்கள், ஃபங்கஸ் முதலிய உயிரினங்கள் தோன்றும் அதுபோல உருவானவன் தான் மனிதன் எனவே உறுதியாகச் சொல்கிறேன் நாம் ஒரு அழுகிய / அழுகிக்கொண்டிருக்கும் பிரபஞ்சப் பழம் என்பார்.

இதை ஒரு உவமையாக எடுத்துக்கொண்டால் கூட நிஜம் நமது பிடரியில் அடித்து உண்மையைச் சொல்லும்.

ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, கடல் உள்வாங்குகிறது, பனி மழைகள் உருகுகின்றது, புவி வெப்பமயமாகிறது என்கின்ற வார்த்தைகளையெல்லாம் கடந்த 10 - 15 வருடங்களுக்குள்ளாக அனைவரும் மிக அதிகமாக கேட்டிருப்போம்....

பூமி உண்மையில் அழியப்போகிறதா......?

என்கின்ற கேள்வி கடந்த “10-12 வாரங்களில்” மிக அதிகமாகவே கேட்டுக்கொண்டிருக்கிறது.

காரணம் “கொரோனா வைரஸ் “

என்ன தான் நடக்கிறது என்கின்ற அனுமானித்தலுக்குள் சென்றால் கூட நமக்கு எளிதாக புரியும் சமாச்சரம் என்னவென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை.....

“நாம் நடக்கும் பாதையில் யானைகள் நடப்பதில்லை, நாம் தான் யானை நடக்கும் பாதையில் நடக்கின்றோம்”

இந்த சின்ன எடுத்துக்காட்டைப் புரிந்துக்கொண்டால் காட்டை அழித்தது யாரெனப் புரியும்.

மனிதன் மிகக்கொடியவன்,

இறைவன் படைத்ததிலேயே மிக உன்னதமான உயிர் தான் தான் என்று தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு,

தனக்கான தேவைகளுக்காக, தனது இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக நியாய தர்மங்களை உருவாக்கிக்கொண்டு, அதற்கு முட்டுக்கொடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை அமைத்துக்கொண்டு இன்று எல்லா உயிரனங்களுக்கும் பேராபத்தை உருவாக்கி வைத்திருக்கின்றான்.

இயற்கையாக உள்ள எல்லாவற்றையும் அழித்து ஒழித்து அதன் மீது தனது அகந்தையையும் (ஈகோ) அந்த அகந்தை உருவாக்கித் தந்த அறிவையும் வைத்து இயற்கையின் மீது புதிய உலகம் கட்ட முயற்சித்தான்.....

இயற்கை ஒவ்வொரு முறையும் அவனை எச்சரித்தது.....

பெரியம்மைக்களும், பெரும் பஞ்சங்களும், நில நடுக்கமும், கடல் கொந்தளிப்பும், பசியும் பட்டினியும் என பல முறை எச்சரித்தது......

இவை எல்லாவற்றிற்கும் எதிராக எதோ ஒன்றைக்கண்டு பிடித்து நொடி நேர வெற்றியடைந்ததாக காட்டிக்கொண்டான்.....

இயற்கை மனிதனை விட பிடிவாதமானது.....

இயற்கையாக அவனுக்குப் புரியாததை செயற்கையாகவும் கூட அவனுக்கு எச்சரிக்கை செய்தது.....

உலகப்போர்கள், சர்வாதிகாரிகள், அணுவைப்பிளந்த அறிவியல்வாதிகள், என அவன் வழியில் சென்றே அவனை எச்சரித்தது.

மனிதன் மகா கர்வக்காரன்.....
பல மோடிக்களையும் ஹிட்லர்களையும் டிரம்ப்புகளையும் பார்த்தவன் அல்லவா....

அவன் அசரவில்லை......

நான் அன்பானவன் என்றான், புத்தனையும் ஏசுவையும் தனது சாம்பிள்களில் ஒன்றாக காண்பித்தான்.

மறைகள் , விவிலியங்கள், கீதைகள் எழுதித்தீர்த்தான் மனிதன்.....

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை உள்ளவர்களை பெற்றுப்போட்டான்.....

விலங்குகள் மீது ஆர்வமுள்ளவர்களை உருவாக்கினான்....

ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம் என்றான் ஓசோனைக்காப்போம் என்றான்....

இயற்கையை ஏமாற்றினான்....

இயற்கையும் சரிக்கு சமம் நின்று எதிர்த்தது மனிதனை.....

மனிதன் தன் முன் ஒன்றுமேயில்லை என்ற உண்மை அதற்கு தெரிந்தாலும், தன்னைப்போல அழுகிய ( Rotten ) கிரகத்தை இப்படி உயிர்வாழ் உலகமாக்கியவன் மனிதன் தானே என்கின்ற நன்றிக்கடனில் அவனுக்கு நல் புத்தி மதிகள் சொன்னது.....

மனிதன் இயற்கையைத் தாண்டியதாக உணரத்தொடங்கிய பின்பு புத்திமதிகள் அவனது ஆசன வாயிலைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பர்களாகின....

வெறுத்துப்போன உலகம் மீண்டும் அவன் வழியேலேயே சென்று இனி நீ இன்னொரு மனிதனுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் தாண்டி தன் மூக்கையோ வாயையோ கூட தொடக்கூடாது அப்படிச் செய்தால் நோய் தொற்றிச் சாவாய் அதற்கு பெயர் கொரோனோ வைரஸ் என்றது....

மனிதன்
எப்பொழுதும் போல்
சற்று பயந்தது போல் நடிக்கிறான்.....

ஆனால் மனிதன் மீண்டு மீண்டும் வருவான் ஏனென்றால் இயற்கைக்கே இயற்கையான மரணத்தை
உருவாக்கியவன் மனிதன்.

நம்பிக்கை என்கின்ற ஒற்றைப் பலத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் முடிவு பெறாது....

இவன் இந்த பூமியை அழிக்காமல் இவன் அழியமாட்டான் எனவே

“இந்த பூமி செத்துவிட்டது” என்று பெரிதாக ஒரு போர்ட் மாட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போய் விடுவான் மனிதன்..

பாவம் பூமி!!!!!


No comments:

Post a Comment