Thursday, May 07, 2020

ராதா அம்மா


மே 5, 2019  

கமல் கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கனும்டா தம்பி…… என்று தொலைபேசியில் என்னைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம், அம்மா லூஸா நீ ? அவர் கூட எப்ப வேணாலும் போட்டோ எடுக்கலாம், ஒண்ணும் பிரச்சனை இல்லை.


 இப்போ எலெக்சன் நேரம், பாவம் அவரு ரொம்ப பிஸியா இருக்காப்ல! முடிஞ்ச உடனே எடுக்கலாம் என்று போனை கட் செய்து விட்டேன்.

மனசு கொஞ்சமா கஷ்டமா இருந்துச்சு, பாவம் இது வரைக்கும் அம்மா கேட்டு ஒண்ணுஞ்செய்யல…….. கமல் சார் கூட ஒரு போட்டோ தான கேக்குது சரி கேட்டுறுவோம்னு, மூர்த்தி அண்ணனுக்கு உடனே போன் அடிச்சேன். மூர்த்தி அண்ணே, எங்கம்மாக்கு சார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்! எடுக்கலாமான்னு……..?

என்ன சத்யா நீங்க…… யார் யாருக்கோ போட்டோ எடுக்க நீங்க டைம் வாங்கி கொடுக்குறீங்க, நம்ம அம்மாக்கு டைம்மா? சார் கிட்ட கேட்டுருவோம், ஒண்ணும் சொல்ல மாட்டாரு, வரச்சொல்லுங்க, காலைல சீக்கிரமா போட்டோ எடுத்துருவோம்.

சரிங்க அண்ணே, காலைல ஒரு தடவ உங்களுக்கு போன் அடிச்சுட்டு அப்புறமா வரச் சொல்றேன்.சரிங்க சத்யா என்று மூர்த்தி அண்ணே தொடர்பை துண்டித்தார்.

மீண்டும் அம்மாவுக்கு அடிச்சேன், அம்மா நாளைக்கு காலைல சார் கூட போட்டோ எடுத்துடலாம், இன்னிக்கு ஃபுல்லா திருப்பரங்குன்றத்துல பிரச்சாரத்துல இருந்ததால டயர்டா இருக்காப்ல….

அதனால காலைல சீக்கிரமா எந்துருச்சீட்டீங்கன்னா, ஒரு 7 மணி போல கெளம்புனா கரெக்டா இருக்கும் ஓட்டலுக்கு வர அப்படின்னேன்…..

யய்யா தம்பீ ஒன்னும் பிரச்சனை இல்லையே ? பாவம் நாம போயி டிஸ்டர்ப் பண்ணமாதிரி இருக்கக்கூடாதுன்னு அம்மா சொல்ல, அதுலாம் ஒண்ணும் இல்ல,

காலைல பிஸியா இருந்தா நானே சொல்லிடுறேன், எப்படியும் திரும்பி 15 மே மதுரை வருவாப்ல அப்ப கூட எடுத்துக்கலாம்.நீங்களும் அப்பாவும் ரெடியா இருங்க நான் போன் அடிக்கிறேன்.

சரிப்பா, சாப்டியா நீயி……?

சாப்டேன் சாப்டேன்…

வீட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டு போயிருக்கலாம்ல? அம்மா தோச சுட்டு குடுத்துருப்பேன், துணிமணி தொவச்சு போட்டுறுப்பேன்…
அம்மா லூசாம்மா நீ, இங்க ஓட்டல்ல எல்லாமே இருக்குமா, லாண்டரில துணி தொவச்சு கொடுத்துருவாய்ங்க, ரொம்ப டென்சன் எடுக்காதம்மா?

பேசாம தூங்கு, காலைல ஃப்ரெஷ்ஷா எந்திருக்கனும், போட்டோல அழகா இருக்க வேணாமான்னு சிரிச்சுகிட்டே கேட்டேன்.

 என்னத்த அழகா இருந்து…. கமல சின்னப்புள்ளைல நேர்ல பாத்தது இப்போ இத்தன வருசம் கழிச்சு பாக்கப்போறேன் அதுவே சந்தோசமா இருக்கு.


சரிம்மா தூங்கு காலைல அடிக்கிறேன் என்று போனை வைக்க, அதே நேரத்தில் காலிங் பெல் அடிக்க, ஓட்டல் ரூம் கதவைத் திறந்தால் சுகாசினியும் நண்பர் வெங்கடேசும் நின்று கொண்டிருந்தனர்.


அண்ணே டின்னருக்கு போகலாமான்னு சுகாசினி கேட்க,


ரைட்டு கெளம்புவோம்னு சொல்லிட்டே, அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்,ரொம்ப நாளா நம்ம சார் கூட போட்டோ எடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க அதான் நாளைக்கு வரச்சொல்லி இருக்கேன் என்றேன் சுகாசினியிடமும் வெங்கடேசிடமும்,


அப்படியா அண்ணே சூப்பர்ணே!!! காலைலயே சீக்கிரமா வந்துட்டா பிரச்சன இல்லாமா போட்டோ எடுத்துறலாம்னு சுகாசினி சொல்லுச்சு……

ஆமாம்மா, எங்கம்மா எங்கிட்ட கேட்டு நான் எதும் செஞ்சதே இல்ல…..

அம்மாக்கு நான் டாக்டர் ஆகனும், ஆனா நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சேன்,

அம்மாக்கு நான் மதுரைல இருக்கனும், ஆனா நான் சிங்கப்பூர் போயிட்டேன்,

எனக்கு அவுங்க சொந்தத்துல ஒரு பொண்ணு பாத்து வச்சு இருந்துச்சு, அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணனும் ஆனா நான் லவ் மேரேஜ்.


இப்படி சின்ன மேட்டரோ பெரிய மேட்டரோ அது சொன்னத செஞ்சதே இல்ல…

ஆனா இப்போ கமல் சார் கிட்ட வேலை பாக்குறேன்னு சொன்னவுடனே அதுக்கு ரொம்ப சந்தோசம்…….

நான் சொல்லாமலே எனக்கு புடிச்சத இப்பத்தான் எம்மகன் செஞ்சுராக்கான்னு எங்கப்பாகிட்டயும் என்னோட தங்கச்சிகிட்டயும் சொல்லிக்கிட்டே இருக்காம்….

அவன கடேசி வரைக்கும் கமல் கூடவே இருக்கச் சொல்லுன்னு என் தங்கச்சி கிட்ட சொல்லிருக்காம்.

அவ்ளோ புடிக்குமாண்ணா உங்க அம்மாக்கு கமல் சார்னா ந்னு சுகாசினி கேட்டுச்சு,

ஆமம்மா, புடிக்கும்ன்றத தாண்டி கமல் சார் ஃபேமிலி, எங்கம்மா ஃபேமிலி எங்கயோ நெறைய காண்ட்க்ட்ல இருந்துருக்காங்க…… 

“கமலு” இந்தப் பெயர் எங்களது வீட்டில புழங்கும், எங்களுக்கு உரிமையான பெயர்.

பரமக்குடி போயிட்டா எங்க அம்மாச்சி வீட்ல அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்.

இந்தா உங்க சித்தி பத்மா, ஹாசினி (சுகாசினி மணிரத்தினம்) கூடத்தான் படிச்சா, அவுங்க அக்காவோட டான்ஸ் ஸ்கூல்ல டான்ஸ் கத்துக்கனும்னு தான் சகுந்தலா பெரியம்மா துடியா துடிச்சுக்கிட்டு கெடந்தா…

இப்படி பல நிகழ்வுகள் மூலமா, கமல் சார் எங்க வீட்டுப்புள்ளையாவே இருந்துருக்காரு.


ஆனா என்ன, நான் எங்க சொந்த பந்தத்துக்கூட ரொம்ப அன்னியோனியமா இல்ல, அதனால எனக்கு யாரையுமே பெருசா தெரியாது… கதையா நெறய கேட்டுறுக்கேன் அவ்ளோதான்….

இப்ப திரும்பி இந்தியா வந்தப்ப கூட எங்கம்மாக்கு கொஞ்சம் கோபம் தான், இப்படி சிங்கப்பூர விட்டுட்டு வந்துட்டானேன்னு, எவன் பேச்சயும் கேக்க மாட்டான், அவனா முடிவெடுப்பான், அவனா எல்லாத்தையும் செய்வான், அவனா தப்பு செய்வான், அவனா சரி செய்வான்.

என்னமோ இப்ப, எப்படியோ போயி, கமலஹாசன் கிட்ட  சேந்துட்டான், புத்தி கித்தி மாறிப்போயி  “கமல விட்டுட்டும் போயிடப்போறான்னு” சொல்லிகிட்டே இருக்கு….


அது தான், சரி ஒரு தடவ அம்மாவ கமல் சார் கூட போட்டோ எடுத்துக் கொடுத்துட்டேன்னா, என்னோட பெத்த கடன் முடிஞ்டும்னு சிரிச்சுகிட்டே சொன்னேன். சாப்பிட்டு முடிச்சுட்டு அப்படியே தூங்கப்போயிட்டேன்.  

மே 6, 2019 

கரெக்டா அலார்ம் மாதிரி எங்கம்மா அடிச்சுறுச்சு.

தம்பி நாங்க ரெடியாயிட்டோம்….

 நீ எப்ப சொல்றியோ அப்ப கார எடுத்துட்டு வந்துரோம்.

சரிங்கம்மா நானும் இங்க கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்.

சரின்னு குளிச்சி முடிச்சுட்டு ரெடி ஆகி, கமல் சார் தங்கிருக்கிற ஓட்டல் போனா அங்க அதுக்குள்ள கூட்டம் கூடியிருந்துச்சு.

என்னடா இது சத்ய சோதனைன்னு யோசிச்சுட்டே இருக்குறப்ப, மூர்த்தி அண்ணே கரெக்டா வந்து, வாங்க சத்யா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுடுவோம்னு ரெஸ்டாரண்ட்டுக்கு நடந்து போனோம்.

ஒரு 10 பேரு இருக்காங்க சார் கூட போட்டோ எடுக்குறதுக்கு, ஒவ்வொண்ணா முடிச்சு விட்டுருவோம் அப்படின்னு மூர்த்தி அண்ணே சொல்லிகிட்டு இருக்கப்பையே,

எனக்கு சரி இன்னிக்கு போட்டோ எடுக்க அம்மாவ வரச்சொல்ல வேணாம்னு தோணிடுச்சு.

10 பேரு கூட போட்டோ அப்புறம், சார் தேர்தல் பிரச்சாரத்துக்கு கெளம்பனும், நமக்கும் வேலை இருக்கு. அம்மா அப்பா வந்தா, எப்படியும் ஒரு ½ மணி நம்மால வேற எந்த வேலையும் செய்ய முடியாது அதனால இன்னிக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கைகழுவிகிட்டு இருந்த மூர்த்தி அண்ணே கிட்ட போயி, அண்ணே இன்னிக்கு அம்மாவ கூப்புட வேணாம், சார் திருப்பி 15ம் தேதி மதுரை வர்றார்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்…

மூர்த்தி அண்ணே சிரிச்சுகிட்டே உங்க இஷ்டம் சத்யா எப்ப வேணா கூப்பிடுங்க…. நம்ம அம்மாவன்னார்.

சரிங்க அண்ணேன்னு சொல்லிட்டு அம்மாக்கு அடிச்சேன்,

அம்மா இன்னிக்கு முடியாதும்மா. கொஞ்சம் கூட்டமா இருக்கு 15 மே திருப்பி வர்றாப்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்.

சரிப்பா, சரிப்பா ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்றப்பையே லைட்டா அம்மா சோகமான மாதிரி இருந்துச்சு……

சத்யா இன்னிக்காவது வீட்டுக்கு வருவியா? பிரச்சாரம் முடிஞ்சு? இல்ல இன்னிக்கும் ஓட்டலான்னு? அம்மா கேட்க,

இல்லம்மா இன்னிக்கு நைட்டு சென்னை போறேன், 7 & 8 சென்னை, 9 ம் தேதி சூலூர், அப்புறம் 15 திருப்பி திருப்பரங்குன்றம் பிரச்சாரம். 15 வேணா வீட்டுக்கு வந்துடுறேன்னேன்…

சரிப்பா, ஒடம்ப பாத்துக்க,

புள்ளைங்கள பத்திரமா பாத்துக்க,

கண்ட்த கழியத சாப்புடாத……

கோபப்படாத, முக்கியமா கெட்ட வார்த்தைய கொறச்சுக்க,

கமல் மாதிரி ஆள் கூட இருக்கப்ப கெட்ட வார்த்த பேசுறது நல்லா இருக்காது அப்புறம்……

அப்படின்னு எதோ சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள,

யம்மாயம்மாயம்மா விடும்மா விடும்மா வேல இருக்கு அப்புறமா பேசுறேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டேன்.

 மே 6, 2019 பிரச்சாரம் முடிஞ்சு, நைட்டு சென்னை பயணம், 7ம் தேதி ஆபிஸ் போயிட்டு நைட்டு சீக்கிரம வந்து தூங்கிட்டேன்.  

மே 8, 2019

காலைல முரளி அப்பாஸ் அண்ணே எப்போதும் போல 6.30 மணிக்கெல்லாம் போன் அடிச்சு பேசிகிட்டு இருக்காரு, பின்னாடி எங்கப்பா இன்னொரு ”கால்” ல வர்றாரு,

அண்ணே திருப்பி அடிக்கிறேன்னு சொல்றதுக்குள்ள, என்னோட இன்னொரு நம்பருக்கு அப்பா வந்துட்டாரு,

என்னங்கப்பான்னு கேட்டேன், அம்மாக்கு திடிர்னு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு, அப்போலோல சேத்துருக்கோம். நீ கொஞ்சம் மதுரைக்கு வர்றியான்னு ஒரு மாதிரி ஒடஞ்சு போயி கேட்டாரு….

ஒண்ணும் புரில சரின்னு கெளம்பிட்டேன்.

ஃப்ளைட் ஏறி உக்காந்த உடனே போன், பக்கத்து வீட்டு அக்கா கிட்ட இருந்து “சத்யா சாரி அம்மா could not sustain” இறந்துட்டாங்கன்னு……

ஆஸ்பத்திரி போயி சைன் போட்டு, அம்மாவ வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தங்கச்சிக்கு போன் அடிச்சு, எல்லா வேலைய முடிச்சுட்டு சாயந்திரமா அப்பா பக்கத்துல உக்காந்து இருக்கப்ப

“கமல் சாரோட ஃபோன்”  என்ன சத்யமூர்த்தி அப்படின்னு….. விசயத்த சொல்லிட்டு இருக்கப்பவே,

ரெண்டு நாள் முன்னாடி தான் அம்மா ஃபோட்டோ எடுக்கனும்னு சொன்னாங்களாமே, கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானேன்னு……. கமல் சார் கேக்க…….

தெர்ல சார்,

கமல டிஸ்டர்ப் பண்ணாதடா, அவரு ஃப்ரியா இருக்கப்ப எடுப்போம்னு சொன்னாங்க சார், அப்படின்னு அழுகக்கூட தெரியாம சொல்லிட்டே இருந்தேன்……

 “என்னிக்கு இவன் என் சொல்லு பேச்சு கேட்டு இருக்கான்னு” அம்மா சிரிச்சுகிட்டே எங்கப்பா கிட்ட சொல்ற மாதிரியே ஒரு சவுண்ட் கேட்டுச்சு அசரீரியா இல்ல என்னோட குரலான்னு எனக்கே சந்தேகமா இருந்துச்சு..


No comments:

Post a Comment