சல்பேட்டா - இடியப்பன் - கறிக்கார பாய்
பெரியாரை துவக்கப்புள்ளியாக சிந்தையிலேந்தி, திராவிடத்தை மய்யப்புள்ளியாக கையிலேந்தி, பிறப்பாலும் சாதியாலும் மதத்தாலும் ஒடுக்கப்பட்டோர், தடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், முடக்கப்பட்டோர் ஆகியோருக்காக தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக, தமிழ் மொழியினை மூச்சுக்கருவியாகக்கொண்டு செயல்பட்ட பல்வேறு இயக்கங்களின் வரலாற்றினை மறைக்கும் வண்ணம் இன்று பல புதிய போராளிகளும் போலி புரட்சியாளர்களும் பெரியாரின் இடதுசாரி தமிழ்தேசியத்தையும் சாதி மறுப்பீடையும் குறை சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது.
தமிழுணர்வு, முற்போக்காளர்கள் என்கின்ற பெயரில் மீண்டும் பார்ப்பனப் புத்திக்காரர்களும், சில பல ஏஜண்ட் அரசியல் செய்பவர்களும் வரலாற்றின் மீது மாஸ்க் போட்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செயல்கள் அதிகரித்திருக்கின்றது.
வெட்டு, குத்து, ரவுடியிசம் என்பன பொதுவாக வட சென்னையின் அடையாளங்களாகச் சொல்லப்பட்டும் பேசப்பட்டும் பதிவு செய்யப்பட்டும் படமாக்கப்பட்டும் வருகின்றன.
ஆனால், இவை எல்லாவற்றையும் விட வடசென்னையின் அடையாளங்களாக உண்மையில் இருப்பவை வேறு.
வடசென்னை என்பது ஒரு உணர்வு. பூர்வக்குடிகளின் வாழ்வியல், நீண்ட நெடும் வரலாற்று பாரம்பரியக் கொண்ட நிலவெளி உரிமை.
அம்மண்ணின் ரத்தமும் வியர்வையும் அழுக்கு படிந்தது போலவே கண்களுக்குத் தெரிந்தாலும் அதில் கேரம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள், தேசிய அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.
அதுபோல பாக்ஸிங்கிற்கும் அடையாளமாக இருக்கிறது வடசென்னை.
தற்போது இந்த வரலாற்றை மையமாக வைத்துதான் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
பரம்பரை என்றால் எதோ ஜாதிய அர்த்தத்தில் சொல்லப்படும் ஆண்ட பரம்பரை அடிமை பரம்பரை அல்ல.
இன்று இருக்கின்ற ஸ்போர்ட்ஸ் அகடமி ஸ்போர்ட்ஸ் காலேஜ், கோச்சிங் செண்டர் என்பது போல அந்தக் காலத்தில் பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடிப்படையில் இருந்து அவ்விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றுவோம் என்று இன்றைய அகாடமிகளும் கோச்சிங்க் செண்டர்களும் சொல்கின்றனவோ அதே போல தான் இந்த "பரம்பரை" என்று பெயர் வைத்துக்கொண்டு கோச்சிங்க் அளித்த அகடமிக்களுக்கும் இருந்திருக்கின்றது.
ரோஷமான பல பாக்ஸர்களை உருவாக்கிய வடசென்னைக்கு 80 ஆண்டு கால வருட வரலாறு இதற்குப் பின்னால் இருக்கின்றது என்பது பலருக்கும் தெரியாது.
சார்பட்டா பரம்பரை திரைக்கதையில் தமிழகத்தின் வரலாற்றை மிகக்குறைவான குறியீடுகள் மூலம் ( 😜😜😜ப.ரஞ்சித் என்றாலே குறியீடு தானே) திராவிட முன்னேற்றக்கழகத்தினர் எப்படி வடசென்னைப் பகுதியில் கொள்கைக்காகவும் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் உறுதுணையாக நின்றார்கள் என்றும், காங்கிரஸ் கட்சி கொடியுடையவர்களை எப்படி எதிர்த்தனர்,
பின்னர் அதே திராவிட வழி வந்த திரைப்புரட்சியாளர்கள் சாராயத் தந்தைகளை உருவாக்கியது எப்படி ( அவர்கள் இன்று கல்வித்தந்தைகளாக உருவெடுத்து இருப்பது அதை விட கொடுமையான விசயம்)
எமர்ஜென்சி போன்ற சர்வாதிகாரப்போக்கினை ஒன்றிய அரசுகள் எப்போதும் தமது கொள்கையாகவும் தன்மையாகவும் வைத்திருக்கின்றது என்பதை அறுதியிட்டு சொன்னதற்கும்,
அம்பேத்கர்-பெரியார்-கலைஞர் என்கின்ற அந்த நீண்ட “பரம்பரை” அதாவது
“School of Thoughts” குறித்தும் வெளிப்படையாக படமெடுத்து வெளியிட்டதற்காகவே ப.ரஞ்சித்திற்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.
கருப்பும், சிவப்பும், நீலமும் தான் என்றுமே அதிகாரத்திற்கு எதிரான நிறங்கள்.
மற்றவையெல்லாம் "சார்பு நிலையற்ற" என்கின்ற புரட்டுவாதத்தின் இன்னொரு பாதையற்ற பொய்மை!
No comments:
Post a Comment