Tuesday, September 08, 2020

பார்ப்பன எதிர்ப்பா? பார்ப்பனிய எதிர்ப்பா ?

பார்ப்பனர்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வன்மம் நிறைந்த பதிவுகளும் கருத்துக்களும் தொடர்ந்து நீங்கள் பதிவு செய்துகொண்டே இருக்கிறீர்கள் என்று எனது தாம்ப்ராம் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்???

பார்ப்பனர்களுக்கு எதிரான என்று எனது கருத்துக்களை நான் சுருக்கிக்கொள்வது என்றும் கிடையாது. 

என்னளவில் பார்ப்பனியத்திற்க்கு எதிரான கருத்துக்களே.... 

பார்ப்பனியம் என்பது தனிமனிதர் சார்ந்தது!!

பிற்ப்படுத்தப்பட்ட,மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களில் கூட பார்ப்பனிய சிந்தனை கொண்டோர் உள்ளனர் அவர்களையும் நான் அறிவேன்!!!! 

சமூகத்தில் படிநிலைகளை செங்குத்தாக வைத்து சமூக அநீதிக்கு வழிவகுத்தது பார்ப்பனீயம் மட்டுமே. ஆகவே எப்பொழுதும் அதற்க்கு எதிர்திசையில் தான் எனது பயணம் அமையும்.

தகுதி / தரம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அனைத்தையும் உள்ளடக்கி, அத்தகுதியை பிறப்பில் வைத்ததே பார்ப்பனீயம் செய்த அருஞ்சாதனை!!!

எனது பிறப்பு எனது தகுதி அடிப்படையில் அமையாதபொழுது பிறப்பிற்க்கு பின்னாலான எனது வாழ்வு ஏன் எனது பிறப்பை ஒட்டி முடிவு செய்யப்படும் என்ற அளவில் தான் எனது கேள்விகள் கேட்கப்பட தொடங்கியது......

எங்கள் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்துகொடுத்த மீனாட்சியக்காவின் கூலியை கொடுத்த எனது அம்மா அவர்களின் கைகளை தொட்டுவிடாமல் அந்த 5 ரூபாயை கொடுத்ததை பார்த்து ஏன் என்ற கேட்ட எனக்கு சொல்லப்பட்டது "அவுங்க கீழ் ஜாதிப்பா" 

அதே என் அம்மாவின் கைகளைப்பிடித்து சென்ற கோயில்களில் எனக்குத்தரப்பட்ட பிரசாதங்கள் எனது கைகளை நோக்கி தூக்கி வீசப்பட்டபொழுதும் எனக்கு சொல்லப்பட்டது " அவுங்க ஒசந்த ஜாதி" 

இரண்டையும் புரிந்து கொண்ட மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்த அந்த வயதில், "நான் ஐயராக மாறிவிடலாமா என்று என்று புரட்சியாக யோசித்து பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் மொழியாக இருந்த தமிழைத்துறந்து "சமஸ்கிருதம்" படித்தேன்.  

அப்படி சம்ஸ்கிருதம் படித்து பாஸான பிறகும் எனது பிரசாதங்கள் கோயில்களில் என்னை நோக்கி வீசத்தான் பட்டது!!!

எனது  ஜாதிய அடையாளம் தேவைப்படாத அல்லது ஜாதி மூலமாக எனக்கு கிடைக்கவிருந்த மேற்படிப்பு தேவையில்லை என்று " ஓட்டல் மேனேஜ்மெண்ட்" கல்லூரியில் சேர்ந்தேன்!! இட ஒதுக்கீடு என்று மேல் ஜாதியினர் போடும் பிச்சை எனக்கு தேவையில்லை என்று ஒரு எதிர்ப்பு, 

இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல எனது உரிமை என்று புரியவே வெகு நாட்களானது. 

எனது மொழி மற்றும் சாதி அடையாளங்களை கடந்து செல்ல காதல் திருமணமே சரியானது என்று முடிவு செய்து, அதுவும் எனது மொழியைச்சாராத பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து திருமணம் செய்தேன்.

எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி/ மத / மொழி / இன தாக்கங்களே இல்லாத பெயர்களை வைத்தேன். 

ஆனால் அவர்களுக்கு ஜாதி/மதம்/இனம்/மொழி அனைத்தையும் சொல்லிக்கொடுத்தேன் அதை ஏன் அவர்களின் தந்தை எதிர்க்கிறான் என்பதையும் புரியவைத்தேன். 

இவையெல்லாவற்றையும் நான் எதோ ஒரு புரிதலில் செய்து கொண்டுதானிருந்தேன்....

ஆனால் மிக மெதுவாகத்தான் பெரியார் தான் எனக்கு புரியவைத்தார் மீனாட்சியக்காவை தொடாத எனது அம்மா கூட நவீன பார்ப்பன சிந்தனையாளர் தான் என்று...... 

எனவே பார்ப்பனியத்தை எதிர்ப்பது மட்டுமே எனது அரசியல்,எனது கொள்கை,எனது வாழ்வியல் முறை என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டுள்ளேன். 

என்னைப்புரிந்து கொள்ள முடிந்தால் நலம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட நலமே!!!!

09/09/2017 FaceBook 

No comments:

Post a Comment