Sunday, May 30, 2010

மறுக்கப்பட்ட ஆப்பிள்!!!

ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாரா வதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம் –தந்தை பெரியார்.

கற்பு,காதல்,கலாசாரம்,ஒழுக்கம்,புனிதம், புண்ணாக்கு இப்படி ஏகப்பட்ட திரிவுகளாய் நம் வரலாறு முழுக்க, நம் சமூகம் முழுக்க, வாழ்க்கை முழுக்கத் திரித்துப்போயிருக்கின்றனர் ஏகப்பட்ட ஒழுக்க சீலர்கள்,இப்படிப்பட்ட ஒழுக்க சீலர்களின் போதனைகளை பற்றியே நமது சமூகம் அதீதமாக கவலைப்படுகிறது.

பல நேரங்களில் இவற்றை பாதுகாப்பதிலும்,பாதுகாவலர்களாக இருப்பதிலும், நாம் மனித நேயத்தையும் மறந்து,உடல் ரீதியான,வெறும் இனப்பெருக்க உறுப்புகளின் வழியான ஒழுக்கங்களை மட்டுமே ஒழுக்கங்களாக வரையறுத்து,அதையே சமூக ஒழுக்கமாக நிர்ணயிக்கவும் செய்து இங்கு தீர்ப்பெழுதுகிறோம்.

இப்படிப்பட்ட மதிப்பீடுகளால் அடிமைத்தனமும்,அறிவுத்தடையுமே ஏற்ப்படுமேயன்றி வேறொன்றுமில்லை.

அதுவும் பெரும்பான்மையாக இவை குறிப்பிட்ட ஒரு(பெண்) பாலினத்திற்க்கான வரையறையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆண்களை ஒத்த பாலியல் விருப்பங்களையும்,முயற்சிகளையும்,மீறல்களையும் அல்லது இயல்பான,இயற்கையான பாலுணர்வு விருப்பங்களை வெளிப்படுத்தும் பெண்களை ஒழுக்கமற்றவர்கள் வரிசையில் முதன்மைப்படுத்துவது கலக்கத்தையே தோற்றுவிக்கிறது.

கலாச்சாரத்தளங்களிலான மீறல்கள், அந்த மீறல்களை முன்னெடுக்கும் மனிதர்களை மிக முக்கியமாக அவர்கள் பெண்களாக இருப்பின் அவர்களை விபச்சாரியை விட கேவலமான ஒரு நிலையில் நிறுத்தி விமர்சித்தல் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடாகவே இருக்கிறது. அந்த கலாசார மீறல்களினால் ஏற்ப்படும் அதிர்வுகளை சந்திக்கவியலாத புரட்சியாளர்களை உள்ளடக்கியதாகவே இச்சமூகம் இருக்கிறது

மறைபாதைகளிலூடான பயணங்களில் இருந்து வெளி வந்து, வெளிச்சத்திற்க்கு வந்து,சரி நிகர் சமமாக நிற்க்கும் சில பல பெண்களையும் நரகலை விட அசூசையாக கருதுவது எந்த வித கருத்தியலுக்குட்ப்பட்டது என்பது விளங்கவில்லை.

இந்நேரத்தில் பெண்ணிய கருத்துக்களை,பெண்ணுடலை பாடுபொருளாக,பாலியல் கருத்தை முன்னெடுக்கும் பெண்களுக்கும் சில விசயங்களில் புரிதல் வேண்டும்.பெண்கள் எந்த விதமான ஆடைகளும் போடலாம்,எதையும் பாடுபொருளாக கொள்ளலாம் தவறு இல்லை இருப்பினும் நம்முடைய சமுதாயமும் நமது மக்களும் அந்த விசயங்களை ஏத்துகொள்ளகூடிய மன நிலைக்கும் அந்த பக்குவத்திற்க்கும் இன்னும் வந்து விட்டார்களா...... என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும்.

ஒரு சமுதாயத்தில் எப்பொழுதும் முன்னோக்கி சிந்திப்பவர்கள் பைத்தியகாரர்களாக அடையாளப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது

இன்னும் பக்குவப்படாத ஒரு சந்தையில் அந்த சந்தைக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்தை செய்வது என்பது மிகுந்தஅபாயமிக்கது”.

இந்த சந்தைபடுத்துதலில் உள்ள அபாயத்தின் பின் விளைவுதான் நமது சமுதாயத்தில் பெண்கள் விசயத்தில் ஏற்ப்படும் பல விதமான விமர்சனங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம்.

இதிலிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்சனையையும் கவனத்திலெடுப்பது இங்கு தவிர்க்கவியலாது,என்னவெனில்,பெண்கள் ஆடையில் இருந்து அரசியல் வரை எல்லாவற்றிலும்தீர்மானிப்பதுஎன்பது என்னவோ ஆண் தான்.

நன்மை/தீமை,சரி/தவறு,பாவம்/புண்ணியம் முதலான விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை பெரும்பான்மையாக இன்னும் ஆண்களிடமே இருக்கின்றது.எனவே இச்சமுதாயத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் ஆண்களின் கருத்தியலுக்குட்ப்பட்டும்,அனுமதிக்கும்,புரிதலுக்கும் உட்ப்பட்டே எடுக்கப்படுகின்றது.

இங்கே நமது சமூகத்தில் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர்.

தீர்மானிக்கும்” (எந்த விசயத்தையும்) இடத்தில் பெண்கள் என்றும் இருந்ததில்லை

எந்த பெண்ணாவது தனியாக சிந்தித்து தனது கருத்தை தனது கருத்தாகவே.....வெளியே சொல்ல கூடிய சுதந்திரம் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் அனுமானிக்க முடிகிறது.

அப்படியே வானத்திற்க்கு கீழான ஏதாவது ஒரு விசயத்தை பற்றி பேசினாலோ,எழுதினாலோ அது இந்த ஆண் சமூகத்தின் மூளைக்கு ஏற்ற கருத்தாகவோ,அதனால் அங்கீகரிக்கப்பட்ட கருத்தாகவோ அல்லது ஆதரிக்கப்பட்ட கருத்தாகவோ அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய கருத்தாகவோ இருக்க வேண்டியது அத்தியாவசியமாகிவிடுகிறது.

வீட்டில் சாதாரண பெண்களிடம் அவர்களின் தந்தை,சகோதர்ர்கள்,கணவன்கள் மூளையாகவோ அல்லது நீதிவான்களாகவோ இருக்கின்றனர்.வெளியே ஆண் முதலாளிகளால் சாதாரண பெண்களில் இருந்து பெண்ணியம் பேசும் பெண்கள் வரை, பெண் உடை வடிவமைப்பாளர்களில் இருந்து பெண் ஊடகவியலாலர்கள் வரை வெறும் ஏவலை செய்யும் வேலைக்கார்ர்களாவே பயன்படுத்தபடுகிறார்களே தவிர சக விலங்காக யாரும் கருதவில்லை

இன்றைக்கு இருக்கிற முதலாளித்துவ நுகர்வு கலாசாரத்துக்கான சந்தையில் தங்கள் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கான பொருட்க்களை தீர்மானிப்பதற்கான உரிமை கூட தனி மனிதர்களுக்கு மறுக்கப்பட்டு வெகு காலமாகிவிட்டது.

இருப்பவைகளில் சந்தைபடுத்தப்பட்டவைகளில் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே நமது கைகளில் விடபட்டுள்ளது.


நிலமையிப்படியிருக்க,இன்றைக்கு பெண்ணிய கருத்துக்களை கூட பெண்கள் தீர்மானிக்கவில்லை. அது ஆண்களால்,ஆண் முதலாளிகளால் தங்கள் விருப்பப்படி தயாரிக்கப்படுகிறது.பெரும்பாலும் ஆண்களின் உணர்வுகளுக்கு மறைமுகமாக தீனி போடும் வகையில்தான் பெண்ணிய கருத்துக்களும் நிறுவப்படுகிறது. அதை எழுதுவதும்,பதிவதும் அதையே பெண் விடுதலை என்று பேச வைப்பதும் முதலாளித்துவம் மட்டுமே அதை பெண்ணியம் என்று பேசுபவர்கள் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் மட்டுமே.

ஏனெனில் சந்தைபடுத்தப்படும்பெண்களுக்கான கருத்தியலில்இருக்கும்மறைமுக ஆபாசத்தை” ”நியாயபடுத்தும்கருத்தியலை கட்டமைத்த பிறகே இது போன்ற கருத்துக்களை ஆணாதிக்க முதலாளித்துவ சமூகம் அறிமுகம் செய்கிறது.

எனவே பெண்ணியவாதிகள் தங்கள் கருத்துக்களை சந்தைப்படுத்தும் முன்,சற்றே இவை பற்றிய அதீத எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது மிக அத்தியாவசியமாகிறது.

எவ்வாறு ஆங்கிலம் பேசுவதற்க்கு முன்னர் நமது மூளை தமிழில் சிந்தித்து பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பின் ஆங்கிலத்தில் பேசுகிறதோ,அதே போல பெண்களும் முதலில் பெண்ணிய கருத்துக்களை கூட ஆணாதிக்க மன நிலையில் இருந்து சிந்தித்து பின் அதை பெண்களுக்கான மொழியாக மொழி பெயர்த்து பின் அதை தமது கருத்தாக சொல்லும் சூழலே இருக்கின்றது.

இதுபோலில்லாமால்,மனோரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெண்கள் பெண்களாக சிந்திக்க வேண்டும்.அதில் மிக கவனமாகவே இருக்கவேண்டும்.

தவிர ,பெண்களுக்கான மொழி, இத்தகைய வெம்மையின்,வெறுப்பையுமிழ்வதின் காரணம் என்ன?

சமூகத்தின் எந்த பழிக்கு இந்தப் பதில்?

என்பவற்றை நாம் மிக கவனமாக நோக்க வேண்டும்.

மிக கேவலமான.சமமில்லாத,சுயமில்லாத ஒரு இருப்பை பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் தனக்காக தன்னை நிலை நாட்டிக்கொள்ளவும்,சுயநிர்ணயம் செய்துகொள்ளவும், சமூகத்தின் ஒருதலைப்பட்சமான ஒழுக்க விதிகளை மீறவும்,மீட்பு பெறவும் விரும்புகிறாள் என்பதையே பெண் இத்தகையதொரு வன்மத்தின் செய்தியாக சொல்ல விரும்புகிறாளா????

சாதீய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒரு சாராரின் குமுறலின் ஒரு வடிவமாக ஒலிக்கும், ”அடங்க மறு”,”அடித்து நொறுக்கு”!!போன்றதான ஒரு அடக்கப்பட்ட பல நூற்றாண்டு வெம்மையின் கொப்பளங்களாகத்தான் இந்த குறியீட்டு இலக்கியங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ஒப்பிடலாமா????இது கண்டிப்பாக தவறுதான் என்றாலும் தவிர்க்கமுடிவதில்லையே!!!!

எதையெல்லாம் பாவம் என்று கற்பிக்கப்பட்டதோ அதையெல்லாம் சகட்டுமேனிக்கு உடைத்தெறி!!! என்ற அடங்கா கோபம்,பழிக்கு பழி வாங்குதல் போன்ற கீழ் நிலையிலான ஒரு போக்குத்தானே தவிர வளர்தல் அல்லது அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக இதை கண்டிப்பாக பார்க்க முடிவதில்லையே....!!!!

இத்தனையாண்டுகள் பெண் தன் அழகின் இரகசியங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதிலும், தனதுகற்புத் தன்மையை நிரூபிப்பதிலுமேஅதிக சந்தோசம் கொண்டவளாக இருந்திருக்கிறாள்,அப்படிப்பட்ட பெண்டிரை தலை மேல் தூக்கிவைத்து கொண்டாடிய நாம் இன்று சிலர்கற்பை துச்சமாக்கியதும்அவர்களை துவெஷிப்பது ஆதிக்க மனப்பான்மையா அல்லது ஒழுக்கத்தின் பாலான நமது கண்டிப்புத்தன்மையா???

இலக்கியத்தை விற்பனை பொருளாக்க பெண்ணுடல் பற்றிய வர்ணனைகள், மிதமிஞ்சிய ஒரு சூழலில்,அதே யுக்தியை பெண்களே கையிலெடுப்பதை சகித்துக்கொள்ள முடியாத மன நிலையையே பெண்ணுடல் சார்ந்த்த பெண்ணிய எழுத்துக்களின் எதிர்ப்புக்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா???

அதே நேரத்தில், நம் சமூகத்தில் பெண்ணியம் என்பது பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவதற்க்கான விடுதலை என்றும், எதிர்பாலினத்தின் அதிரடி கவனயீட்டினை பெறுவதற்க்காக தனக்கோ,தனது உடலியலுக்கு சற்றும் ஒவ்வாத உடையலங்காரங்களை அணிவதும்,சிகரெட்,மது மற்றும் இன்ன பிற போதை வஸ்துக்களை உட்கொள்வதற்க்கான சுதந்திரம் என்றும், தாங்கள் விரும்பும் அளவிற்கு,பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் என்றும் தவறாக அர்த்தப்படுத்தி கொள்கின்றனர்.

என்னைப்பொருத்தவரை, தமிழீழப் பெண்கள் எட்டியுள்ள விடுதலையானது மனித வரலாற்றிலேயே எங்கும் காணவியலாத மிக முக்கிய சாதனையாகும்.தமிழீழப் பெண்கள் போர்க்களத்தில் ஆண் வீர்ர்களுக்கு இணையாக நின்று யுத்தம் செய்த்திலாகட்டும்,வல்லரசுகளால் தயாரிக்கப்பட்ட இராணுவத்தை தமது சுய நிர்வாகத்திறன்,ஆளுமை மற்றும் யுத்த யுக்திகளை கொண்டு தம்மக்கள் விடுதலையோடு பெண்ணின விடுதலைக்கும் எடுத்துக்காட்டாக நின்ற தன்மையாகட்டும்,புலத்திலும், தங்களது சுயபலத்தை,மிகுந்த புத்திசாதுரியத்துடன் விடுதலைக்காக தமது மக்களை இன்னும் தயார்ப்படுத்துவதிலும்,துணையாகவும் இணையாகவும் இருப்பதில் தாங்கள் இயலாமையுடையவர்கள் என்றோ, புத்திசாதுரியம் அற்றவர்கள் என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்துள்ளனர்

இத்தகையதோர் முன்னெடுப்பே நிதர்சனமான பெண்ணியமாகும்.

பொருளாதாரநோக்கத்திற்காகஉடலை” ”பாலியலைவிற்கின்ற செயலானது எப்படி எந்தவிதமான பெண்விடுதலையையும் ஈட்டித்தராதோ அதே போல்,பொருளாதார நோக்கத்திற்காக விற்க்கப்படும் பெண்ணுடல் சார்ந்த்த இலக்கியங்க்களும் எவ்வித விடுதலையும் ஈட்டித்தராது என்பதில் ஐயமில்லை.

ஆணின் பாலியல் வக்கிரத்திர்க்கு எதிர்வினையாற்றும் பெண் பாலியல் வக்கிரமேயன்றி பெண்ணிய விடுதலைக்கான முன்னெடுப்பு அல்ல!!!

நமது சமூகம், சமத்துவம் நோக்கிப் பயணப்படாதவரை, ஆதிக்க சிந்தனை அறுபடாத வரை, பாலியல் வக்கிரம் பண்படுத்தப்படாதவரை, இந்த நிலைப்பாடு மனிதனின்(இருபாலரின்)மனநிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும.


எல்லாவற்றிற்க்கும் மேலாக சமூக தளத்திலும்,கலாச்சார தளத்திலும் பாலினம் கடந்ததொரு சூழல் அமையப்பெறும் பொழுதுதான் மறுக்கப்பட்ட ஆப்பிளின் தத்துவமறிவோம்.

No comments:

Post a Comment