Sunday, February 02, 2014

தமிழாக்கம் பற்றிய ஒரு பார்வை..............

அண்மைய காலங்களில், தமிழார்வலர்களும்,தமிழுணர்வாளர்களும்,பல்வேறு வழிகளையும்,முயற்சிகளையும்,வெளிகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு முதற்கண் நமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


பல்வேறு தமிழ் மென்பொருள்களையும்,இன்னபிற தமிழ் சார்ந்த தொழில்நுட்பங்களையும் ஆராய்ந்து,கணிணியை தமிழுக்குள்ளும்,தமிழை கணிணிக்குள்ளும் கொண்டுவரத்துடிக்கும் முயற்சியாளர்களின் சீரிய பணியை விவாதத்திற்குட்படுத்துவது நமது நோக்கமல்ல.


அதே நேரத்தில் தமிழ்மொழிச்சூழல் இருக்கும் இன்றைய சிக்கலான நிலையையும் கருத்தில் கொண்டு சில விடயங்களில் நமது சிந்தைத்தெளிவு ஏற்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


இன்றைய தமிழ்மொழிச்சூழல் இயங்கும் போக்கு ஆபத்தானதாகவும்,ஆரோக்கியமற்றதாகவும் உள்ளது.தமிழ்ப்பெருமக்கள்,தமிழில் பேசுவதையே அவமானமாகவும்,தமது ஆளுமைக்கு சம்பந்தமில்லாததாகவும்,அசூசையாகவும் கருதுகிறார்கள்,அதே நேரத்தில் தமிழ்இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதையும், ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதையும் ஒரு மேட்டிமை மனோபாவமாகவும்,ஒரு செயற்கையான ”ஆளுமை பிம்பத்தை” தரவல்லதாகவும் கருதுகின்றான், தமிழ்நாட்டில் எங்கு நோக்கினும் தமிழே இல்லாத சூழலிலும் தமிழன் தான் ஏதோ வேறொரு கிரகத்தில் இருப்பது போல இருக்கிறான்.


தமிழே பேச மாட்டேன் என்கின்ற ஒரு கூட்டத்திடமும்,ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு ”மேட்டிமை பிம்பமாக” கருதும் கும்பலிடமும்,. ,ஃபேஸ்புக்கிற்க்கு ”முகப்புத்தகம்” என தமிழ்ப்படுத்தலும்,”கூக்ல்” ற்க்கு, ”கூகுள்” என தமிழ்ப்படுத்துவதும், ஏற்கனவே குழப்பத்திலிருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை மேலும் குழப்பத்தில் தள்ளி, இது போன்ற தமிழ்ப்படுத்தும் ஏனைய ஆர்வலர்களின் மற்ற முக்கிய முன்னெடுப்புகளையும் எள்ளி நகையாடி உதாசீனப்படுத்துவதற்கான வாய்ப்பிருக்கிறது.


அமெரிக்ககாரன் கண்டுபிடித்த ஒரு “சாக்லேட்டை” அதை சுற்றிக்கொடுக்கும் ரேப்பரில் வெறுமனே “made in Tamilnadu” எனசுற்றிக்கொடுத்தால் அதனால் என்ன பயன்? சாக்லேட்டையே கண்டுபிடிப்பதுதானே ஒரு அறிவுசார்சமூகம் செய்யவேண்டும்??

உதாரனத்திற்க்கு “KING FISHER” என்ற மதுபான வகையை தமிழகத்தில் “மன்னர் மீன் பிடிப்பாளர்” என்றோ அல்லது “மீன்கொத்தி பீர் குடுங்க”என்று சொன்னால் தகுமா? முறையா ?? ஒரு நகைச்சுவைக்காக நண்பர்கள் மத்தியில் பேசுவதென்பதில் நமக்கும் உடன்பாடுதான் ஆனால் இதை ஒரு முக்கியமான நிகழ்வாக சொல்வதென்பது ஒவ்வாத விசயமாகவே நமக்கு படுகிறது. தவிர “FACEBOOK” என்பது ஒற்றைச்சொல் அடையாளம்,அதை FACE ஐ முகமாகவும்  BOOK ஐ நூலாகவோ/புத்தகமாகவோ தமிழ்ப்படுத்துவது நாளை யாரோ ஆங்கிலேயர்,திருக்குறளை திரு வை Mr.ஆகவும் குறளை VERB ஆகவும் மாற்றி “MRVERB” என்று சொன்னால் நாம் சிரிக்க மாட்டோமா??? 


இப்படியான ஒரு தமிழாக்கத்தால் தமிழை மதிப்பானா?அல்லது தமிழில் பேசுவானா? அல்லது தமிழை தன் தாய்மொழியாக கொண்டதிற்காக பெருமைப்படுவானா? கண்டிப்பாக இல்லை.


தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் அவமானமாக உணரவைக்கப்படும் தமிழன், தனது சுய உணர்வின்றி ஒரு பிரவாகம் போல ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி பின் உளவியல் ரீதியாக ஆங்கிலத்திற்குள் தன்னையறியாமலேயே கடத்தப்படுகிறான்.


இப்படிப்பட்ட ஒரு சூழலில்,தமிழனுக்கு ஒரு அனுசரனையான சூழலை ஏற்படுத்திக்கொள்வது தான் இன்றைய  தேவை.


ஏனெனில் தமிழ்மக்கள்,கணிணி,திறன்பேசி மற்றும் இலக்கிய வட்டத்திற்க்குள் தமிழை புகுத்தி பல்வேறு விடயங்களை தமிழ்ப்படுத்தி அழகுபார்ப்பபவர்களை,”தமிழ் ஆர்வலர்கள்” அல்லது தமிழ் உணர்வாளர்கள்" என்று அழைத்து தனிமைப்படுத்துகிறது,

பின்னர்,அதே வேளையில்,"தமிழில் பேசு","தமிழில் படி" "தமிழில் விளம்பர அட்டையை மாற்று" தமிழக விமான நிலையங்கள் மற்றும் அதிகமாக தமிழ்ப்பயணிகளை சுமந்து தமிழ்நாட்டிற்க்குள்ளும் புறமும் இயங்கும் விமானங்களில், தமிழில் பேசு, என சொல்பவனை,நடைமுறை வாழ்க்கையில் தமிழை நடைமுறைப்படுத்துபவர்களை,அதாவது அரசியல் ரீதியாக தமிழை முன்னெடுப்பபவர்களை, “தமிழ்வெறியன்” அல்லது தமிழ்த்தீவிரவாதி” எனச்சொல்லி அவர்களையும் தனிமைப்படுத்திப்பார்க்கும் சூழல்தான் இருக்கிறது.


எனவே,நிறுவனங்களின் பெயரை தமிழ்ப்படுத்திப்பெருமை கொள்வதைவிட ,அந்நிறுவனங்கள் கொண்டு தந்திருக்கும் மென்பொருள்களையும்,புதுமையையும் தமிழ்ச்சமூக,கலாச்சார,பண்பாட்டு மற்றும் மொழிச்சூழலுக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக்கொள்வதும்,அவ்வாறான புதுமைகளை நமது தாய்த்தமிழில் கண்டுபிடிப்புகளாக கொண்டுவருவதற்க்கான முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் செய்வதே இன்றைய முக்கிய கடமையாக இருக்கும். 


நம் தமிழ்சமூகம் தமிழில் பேசுவதற்க்கு நம்மால் என்ன செய்ய இயலும்,மற்றும் தமிழில் இது போன்ற சமூக வலைத்தளங்களையும்,திரட்டிகளையும் மென்பொருள்களையும் எவ்வாறு கொண்டுவருவது எனவும் சிந்தித்து செயல்படுவது சாலச்சிறந்தது என்பது எனது கருத்து.

இதை தமிழகத்தில் இரு கோடுகளாக தனிமைப்பட்டு நிற்க்கும் தொழிநுட்பரீதியான,இலக்கிய இலக்கண ரீதியாக களத்தில் பணீயாற்றும் தோழர்களும்,தமிழை ஆட்சிமொழியாக,அரசாங்க மொழியாக,வணிகமொழியாக அமரவைப்பதற்க்கு களப்பணியாற்றும் நண்பர்களும் ஒரேகோட்டில் பயணிக்கையில் சாத்தியமாகிறது.அதுவே அவசியமுமாகிறது.


அவ்வாறு இல்லையெனில், நாம் செய்யும் செயல்கள் அர்த்தமற்றதாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
அன்பு அண்ணன் பாண்டியராசன் கூறியது போலஇங்கு விவாதித்திற்குள்ளாவது இரண்டு விசயங்கள். ஒன்று,தமிழில் கலைச் சொற்கள் உருவாக்கம் மற்றது நவீன சாதனங்களில் தமிழின் பயன்பாடு. 

நாம் இங்கு சொல்வது கலைச் சொற்கள் பற்றி. social network என்பதைத் தமிழ் படுத்தலாம் ஆனால் social network க்கு பயன்படும் ஒரு நிறுவனத்தின் மென்பொருளின் பெயரைத் தமிழ் படுத்த வேண்டியதில்லை


இவ்வாறான மாற்றோரின் ”வர்த்தக குறியை” அல்லது ”அடையாளத்தையோ” தமிழ்ப்படுத்தியும் அதில் ஒருவகையான பெருமிதம் கொள்வதும் சரியான வளர்ச்சிப்பாதைக்கிட்டுச்செல்லும் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை.


இதை இங்கு பதிவிடுவதற்க்கு முக்கிய காரணம், தமிழார்வலர்களையோ அவர்களது செயல்பாடுகளையோ கேலிக்குள்ளாக்குவதோ அல்லது கேள்விக்குள்ளாக்குவதோ அல்ல,இன்றைய சூழலில் இவ்வாறான விவாதங்கள் ஒரு நல்ல விளைவை நோக்கி நம்மைச்செலுத்தும் என்ற நம்பிக்கையில்தான்……..










No comments:

Post a Comment