Monday, December 14, 2015

பேரழிவும் பெரும் அரசியலும்!!!!

இன்று காலை எழுந்தவுடன் ஒரு மாதிரியான பதை பதைப்புடனேயே எனது செல்லிடத்தொலைபேசியை எடுத்துப்பார்த்தேன்.

வெள்ளம் , அவதி, துயரம், கண்ணீர் என்ற செய்திகளுக்கிடையே எனது கண்களையும் கருத்தையும் ஒரு சேர இழுத்த செய்தி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, விமான நிலையம் அடைக்கப்பட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது, ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள TNSTC, மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து கண்ணில்பட்ட இன்னொரு செய்தி,மத்திய அரசின் முக்கிய அறிவுஜீவியான சுப்பிரமணியசாமியின் வக்கிரமும் அக்கிரமும் கலந்ததொரு செய்தி," மத்திய அரசு தமிழகத்திற்க்கு இப்பேரிடர் காலத்தில் உதவக்கூடாது" 

எனது எண்ணத்தை உறுத்திக்கொண்டே இருந்த இவ்விரு செய்திகள் தான் என்னை சிந்திக்கவைத்தது.

தமிழகம் இவ்வாறு மிகப்பெரிய பேரிடரில் சிக்கித்தத்தளிக்கையில்,மக்களின் வாழ்வாதாரமே பறிக்கப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கையில், இப்பேரிடரிலும் பிணங்களுக்கிடையிலும் ஓட்டரசியல் கனியை சுவைக்க எண்ணும் வக்கிரபுத்திக்கொண்ட தமிழக அரசியல்வாதிகள் ஒருபக்கம் தமிழக அரசை குறைசொல்லிக்கொண்டிருக்க,
தமிழக அரசும், அதிகாரிகளும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் மீட்பு பணிகளை சிரமங்களுக்கிடையில் செய்து கொண்டு தானிருக்கின்றனர்!!!!

ஆனால் சுப்பிரமணியசாமி சொல்வது போல உண்மையிலேயே மத்திய அரசு சென்னைக்கு எதாவது உதவி செய்திருக்கிறாதா என்று பார்த்தால் சற்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நூற்றாண்டில் பெய்யப்பட்ட மிகப்பெரிய கணமழை, சென்னை மாநகரத்தையே உலுக்கிப்போட்ட வெள்ளம், நிலமை இப்படி இருக்கையில், இந்திய மக்களாட்சி தத்துவத்திற்க்குள் அடங்கிய இந்திய இறையாண்மைக்கும் இந்திய அரசுக்கும் உட்பட்ட ஒரு மாநிலத்தின் பேரிடர் பேரிழப்புக்காலத்தில், மத்திய அரசு ஒரு சிறு குழுவை அனுப்பி வைக்கிறது. 

இந்திய தேசியத்தைக்கட்டி இழுப்பதற்க்காகவே பிறந்தது போல பேசும், மத்திய மந்திரிகளை காணவேயில்லை.

இந்திய ஒருமைப்பாடு பற்றி பாடமெடுக்கும் நமது பிரதமரும் போனால் போகுது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் துக்கசெய்தி வெளியிடுகிறார்.

இவ்வளவுதானா இவர்களது தேசிய ஒற்றுமை???இவ்வளவுதானா மத்திய அரசின் தேசப்பாதுகாப்பு???

தமிழக மக்களின் நேரடி இழப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும், கோல்லேட்டிரல் டேமேஜ் எனப்படும் " இணை சேதம்"   எத்தனை லட்சம் கோடி என்பதை கணக்கிலெடுப்பது தற்போதைக்கு கஷ்டம்.

இவற்றையெல்லாம் தமிழக அரசு கைநீட்டி கேட்டால்தான் மத்திய அரசு கொடுக்குமா...??

கார்கிலிலும், காஷ்மீரிலும், இவ்விந்திய தேசத்தில் இங்கு ஒரு பிரச்சனையென்றாலும் உடனே ஓடிப்போய் நிற்பபது தமிழக மக்களாகியா நாம்தானே ?? 

இன்று அவனுக்கு ஒரு தொல்லையென்றால்,துயரென்றால் மத்திய அரசு இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது சரியா முறையா....????

பேரழிவு என்பது உயிரியல், ரசாயனம்,அணுக்கதிர் இவற்றோடு இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் காரணத்தால் ஏற்படும் மழை,புயல்,வெள்ளம், சுனாமி,வெயில் இவற்றையும் உள்ளடக்கியது தான் பேரிடர் அல்லது பேரழிவு. இத்தகைய பேரழிவிலிருந்து பொதுமக்களையும் இன்ன பிற உயிரினங்களையும் பாதுக்காப்பது என்பது ஒரு  நாட்டை ஆளும் அரசின் கடமை. 

இதை கருத்தில் கொண்டே 
என 1999 – ஆம் ஆண்டு பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority - NDMA) அமைக்க பரிந்துரைக்கப்பட்டு
2005ம் ஆண்டு, தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையத்தின்  தலைவராக பிரதமரை நியமித்து புதிய சட்டம் 
ஒன்று இயற்றப்பட்டது.

மேலும்,ஒவ்வொரு மாநிலத்திலும் 
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் செயல்படும் பேரழிவு மீட்பு படையை அனைத்து மாநிலங்களிலும் நிறுவுவதுடன் அந்தந்த 
மாநிலத்தின் முதல்வரின் கீழ், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 
அமைக்கப்படவும் சட்டம் இயற்றப்பட்டது.

2012 வரை இந்த ஆணையத்தின் தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை என்று இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர்  தனது 2013 அறிக்கையில் குற்றம் சாட்டினார் .தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார்,குஜராத்,ஒரிசா உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர,வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம்கூட அமைக்கப்படவில்லை என்கிறது இவ்வறிக்கை.

தமிழகத்தில் 2014,"மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்” அமைக்கப்பட்டாலும், மீட்பு வீரர்களுக்கு உரிய பயிற்சி, ரோந்து வாகனம்,பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் போன்றவை, "தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்களை விட ஒப்பீட்டளவில், குறைந்த  நிலையிலேயே மாநில பேரிடர் மீட்பு வீரர்களுக்கு இருக்கின்றது. இதன் காரணத்தால் மாநில பேரிடர் மீட்பு வீரர்களால் உரியநேரத்தில் 
செயல்பட்டு அழிவு பகுதிகளில் பராமரிப்புபணிகளை மேற்கொள்ளமுடியவில்லை. 

பேரிடர்/பேரழிவு மேலாண்மை என்பது மாநில அரசை விட அனைத்து வகையிலும் உள்க்கட்டமைப்பும்,வசதியும் மனிதவளத்தையும் உள்ளடக்கிய மத்திய அரசாலே சாத்தியம் என்பது பல்வேறு தரவுகளால் நமக்கு புரிய வருகிறது. 
எனவே இதை ஒரு மாநில அரசின் கீழ் கொண்டு வருவதை விட மத்திய அரசின் செயல்பாடாக வைத்திருப்பதிலேயே இவ்வமைப்பு சிறப்பாக செயல்படும் என்பது உறுதி.

இயற்கை பேரிடர்களால் கடும் ஆபத்தை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்த பின்பும் கூட மாநில அரசுக்கு உதவுவதில் மத்திய அரசுக்கு என்ன சுணக்கம் என்பது புரியவில்லை.

சுனாமி,புயல்,மழைவெள்ளம் ஆகியவற்றால் கடுமையாகவும் தொடர்ந்தும் பாதிக்கப்படும் தமிழகத்தில் மீட்பு பணி,மறுசீரமைப்பு,சுகாதாரம் மறுவாழ்வு ஆகியவை 
மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு மீட்புப்பணிகளை முடுக்கி விட்டு, மாநில அரசு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுவதே ஒரு சாமினியனின் தேவையாக இருக்கும்.

இவ்வளவு பெரிய சோகச்சூழலிலும், இன்னல்களத்திலும் தனித்து விடப்பட்ட தமிழக அரசின் மீட்புப்பணி அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஊழியர்களுக்கும், தமிழக அரசு இயந்திரத்திற்க்கும், தமிழக அரசுக்கும் தக்க உதவிகளை கேட்காமல் செய்திடல் வேண்டும்.

அழுதகண்ணீர் கூட வெளியே காட்டமுடியாமல் இறுகிய இன்னல்தோய்ந்த முகத்துடன் தனது குடும்பம் உடமைகளை இழந்து, நாளை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் தமிழக மக்களுக்கு,

அடாது மழைபெய்தாலும், விடாது உழைக்கும் தனது கருமமே கண்ணாயிருக்கும் அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பால்காரர்கள், பேருந்து ஊழியர்களும்,மின்சாரவாரிய தொழிலாளர்களும்,போக்குவரத்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினருமே கைதொழும் கடவுளர் போலயேயன்றி, ஆளும் மாநில அரசை குறைசொல்லும் எதிர்க்கட்சிகளோ அல்லது  பணம் கொடுத்து உதவி தனது சமூக-அரசியல் பிம்பத்தை நிலைநாட்டத்துடிக்கும் அரசியல் சினிமா நடிகர்களோ அல்ல.

No comments:

Post a Comment