Thursday, July 22, 2021

சல்பேட்டா - இடியப்பன் - கறிக்கார பாய்



சல்பேட்டா - இடியப்பன் - கறிக்கார பாய் 

பெரியாரை துவக்கப்புள்ளியாக  சிந்தையிலேந்தி, திராவிடத்தை மய்யப்புள்ளியாக கையிலேந்தி, பிறப்பாலும் சாதியாலும் மதத்தாலும் ஒடுக்கப்பட்டோர், தடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், முடக்கப்பட்டோர் ஆகியோருக்காக தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக,  தமிழ் மொழியினை மூச்சுக்கருவியாகக்கொண்டு செயல்பட்ட பல்வேறு இயக்கங்களின் வரலாற்றினை மறைக்கும் வண்ணம் இன்று பல புதிய போராளிகளும் போலி புரட்சியாளர்களும் பெரியாரின் இடதுசாரி தமிழ்தேசியத்தையும் சாதி மறுப்பீடையும் குறை சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. 

தமிழுணர்வு, முற்போக்காளர்கள் என்கின்ற பெயரில் மீண்டும் பார்ப்பனப் புத்திக்காரர்களும், சில பல ஏஜண்ட் அரசியல் செய்பவர்களும் வரலாற்றின் மீது மாஸ்க் போட்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செயல்கள் அதிகரித்திருக்கின்றது.

வெட்டு, குத்து, ரவுடியிசம் என்பன பொதுவாக வட சென்னையின் அடையாளங்களாகச் சொல்லப்பட்டும் பேசப்பட்டும் பதிவு செய்யப்பட்டும் படமாக்கப்பட்டும் வருகின்றன. 

ஆனால், இவை எல்லாவற்றையும் விட வடசென்னையின் அடையாளங்களாக உண்மையில் இருப்பவை வேறு. 

வடசென்னை என்பது ஒரு உணர்வு. பூர்வக்குடிகளின் வாழ்வியல், நீண்ட நெடும் வரலாற்று பாரம்பரியக் கொண்ட நிலவெளி உரிமை. 

அம்மண்ணின் ரத்தமும் வியர்வையும் அழுக்கு படிந்தது போலவே கண்களுக்குத் தெரிந்தாலும் அதில் கேரம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள், தேசிய அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். 

அதுபோல பாக்ஸிங்கிற்கும் அடையாளமாக இருக்கிறது வடசென்னை. 

தற்போது இந்த வரலாற்றை மையமாக வைத்துதான் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

பரம்பரை என்றால் எதோ ஜாதிய அர்த்தத்தில் சொல்லப்படும் ஆண்ட பரம்பரை அடிமை பரம்பரை அல்ல.

இன்று இருக்கின்ற ஸ்போர்ட்ஸ் அகடமி ஸ்போர்ட்ஸ் காலேஜ், கோச்சிங் செண்டர் என்பது போல அந்தக் காலத்தில் பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். 

அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடிப்படையில் இருந்து அவ்விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றுவோம் என்று இன்றைய அகாடமிகளும் கோச்சிங்க் செண்டர்களும் சொல்கின்றனவோ அதே போல தான் இந்த "பரம்பரை" என்று பெயர் வைத்துக்கொண்டு கோச்சிங்க் அளித்த அகடமிக்களுக்கும் இருந்திருக்கின்றது. 

ரோஷமான பல பாக்ஸர்களை உருவாக்கிய வடசென்னைக்கு 80 ஆண்டு கால வருட வரலாறு இதற்குப் பின்னால் இருக்கின்றது என்பது பலருக்கும் தெரியாது.

சார்பட்டா பரம்பரை திரைக்கதையில் தமிழகத்தின் வரலாற்றை மிகக்குறைவான குறியீடுகள் மூலம் ( 😜😜😜ப.ரஞ்சித் என்றாலே குறியீடு தானே) திராவிட முன்னேற்றக்கழகத்தினர் எப்படி வடசென்னைப் பகுதியில் கொள்கைக்காகவும் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் உறுதுணையாக நின்றார்கள் என்றும், காங்கிரஸ் கட்சி கொடியுடையவர்களை எப்படி எதிர்த்தனர், 

பின்னர் அதே திராவிட வழி வந்த திரைப்புரட்சியாளர்கள் சாராயத் தந்தைகளை உருவாக்கியது எப்படி ( அவர்கள் இன்று கல்வித்தந்தைகளாக உருவெடுத்து இருப்பது அதை விட கொடுமையான விசயம்) 

எமர்ஜென்சி போன்ற சர்வாதிகாரப்போக்கினை ஒன்றிய அரசுகள் எப்போதும் தமது கொள்கையாகவும் தன்மையாகவும் வைத்திருக்கின்றது என்பதை அறுதியிட்டு சொன்னதற்கும், 

அம்பேத்கர்-பெரியார்-கலைஞர் என்கின்ற அந்த நீண்ட  “பரம்பரை” அதாவது 
 “School of Thoughts”  குறித்தும் வெளிப்படையாக படமெடுத்து வெளியிட்டதற்காகவே ப.ரஞ்சித்திற்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம். 
 
“அம்பேத்காரை வைத்து பெரியாரை அடிக்கும்” குறுகிய வட்டத்துக்காரர் தான் Paranjith Pa என்கிற பார்வையை தகர்த்தெறிந்திருக்கின்றார். அவ்வகையில் ஒரு பலே!!!

கருப்பும், சிவப்பும், நீலமும் தான் என்றுமே அதிகாரத்திற்கு எதிரான நிறங்கள். 

மற்றவையெல்லாம்  "சார்பு நிலையற்ற" என்கின்ற புரட்டுவாதத்தின் இன்னொரு பாதையற்ற பொய்மை!

Tuesday, September 08, 2020

இந்தி தெரிஞ்ச தமிழண்டா!!! #PODA

இந்தி பேசத்தெரிந்த தமிழர்கள் கூட பலர் இருக்கிறார்கள் என்பதை இந்தியச் சமூகத்துக்குச் சொல்லிக்கொள்ளும் கடமையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை!!!

அன்றைய திராவிட இயக்கங்கள் "தமிழ் " என்கின்ற ஒற்றைச்சொல் மூலமாக உணர்வு ரீதியாக தமிழர்களை ஒன்றிணைக்க 
முயன்று வென்றனர். 

ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள், தங்கள் சுயநலத்திற்காக தமிழர்களின் உணர்வுகளைப் புண்ணாக்கி, 
அதை வணிகம் செய்து, தங்கள் அரசியல் வளர்ச்சிக்காகவும், குடும்ப லாபத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தி மொழிவியாபாரம் செய்து வருகின்றனர். 

திராவிடத்தை பெயரில் மட்டும் வைத்து தனது தேர்தல் அரசியல் வியாபாரத்தை, இன்று  வட இந்தியத் தலைமையிடம் கொடுத்து, 

முட்டுச் சந்திற்குள் மொழியின் மொத்த வியாபாரம் செய்யும் முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே,

நாமும் சின்னதாய் சில்லரை வியாபாரம் செய்யலாமே என்று வணிக அரசியல் செய்ய வந்த 
"நாங்க மட்டுமே தமிழர்கள்" போன்ற கட்சிகள் இதை "தமிழ்ச் சர்வாதிகார" நோக்கில் பயன்படுத்தத் துவங்கினர். 

தமிழர்களின் அறிவு மிகவும் விரிவானது. 
அது நல்லவைகளை தேர்ந்து அல்லவைகளை நீக்க வல்லது. 

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு" என்று சொல்லிய அறிஞர்களைக் கொண்டது. 

'கெடல் எங்கே தமிழர் நலம் அங்கே கிளர்ச்சி செய்' என்று புரட்சிக்கு வித்திட்ட வீரமரபு கொண்டது. 

எனவே டி சேர்ட்டில் தமிழுணர்வை சேர்த்து தமிழர்களை ஒன்றிணைக்க நினைக்கும் வட இந்திய தேர்தல் நிபுணர்களின் அரைகுறை பேச்சில் ஆர்வம் கொள்ளாமல்,

நல்ல தமிழர்கள் விரும்பினால் அமைதியாக இந்தி படிக்கலாம்! இன்னும் பல மொழிகள் கற்கலாம். தவறில்லை!

*"தமிழன் என்பது தகுதி அல்ல அது அடையாளம் மட்டுமே" என்று சொல்லும் தலைவர்களைக் கொண்டது நம் தமிழ் நாடு!! அவர் சொல் கேட்போம்* 

மெல்லச் சாக, தமிழ் என்ன சமஸ்கிருதம் போல கடவுளின் மொழியா? 

இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!!!

தமிழ்த்தீ பரவும்...... 
ஆனால் எவரின் வணிகமோ வயிறையோ  வளர்க்க அல்ல, தமிழர்களின் வளம் வளர்க்க மட்டும் தான்!! 

பின் குறிப்பு:- 

வினா: அன்றைய திராவிட இயக்கங்கள் இன்றைய திராவிட இயக்கங்கள் வித்தியாசம் என்ன?

விடை: இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ், அப்படின்னு இன்னிக்கும் பல பேரு நெனைக்கிற மாதிரியான ஒரு முட்டாள் தனம்!!!


https://twitter.com/cupidbuddha/status/1302949610638331911?s=21

https://www.facebook.com/630095935/posts/10157565885485936/?extid=yYbXoqQLOwSWom1w


https://www.instagram.com/p/CE1fWcogjr_/?igshid=1eudzt7se8ti

பார்ப்பன எதிர்ப்பா? பார்ப்பனிய எதிர்ப்பா ?

பார்ப்பனர்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வன்மம் நிறைந்த பதிவுகளும் கருத்துக்களும் தொடர்ந்து நீங்கள் பதிவு செய்துகொண்டே இருக்கிறீர்கள் என்று எனது தாம்ப்ராம் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்???

பார்ப்பனர்களுக்கு எதிரான என்று எனது கருத்துக்களை நான் சுருக்கிக்கொள்வது என்றும் கிடையாது. 

என்னளவில் பார்ப்பனியத்திற்க்கு எதிரான கருத்துக்களே.... 

பார்ப்பனியம் என்பது தனிமனிதர் சார்ந்தது!!

பிற்ப்படுத்தப்பட்ட,மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களில் கூட பார்ப்பனிய சிந்தனை கொண்டோர் உள்ளனர் அவர்களையும் நான் அறிவேன்!!!! 

சமூகத்தில் படிநிலைகளை செங்குத்தாக வைத்து சமூக அநீதிக்கு வழிவகுத்தது பார்ப்பனீயம் மட்டுமே. ஆகவே எப்பொழுதும் அதற்க்கு எதிர்திசையில் தான் எனது பயணம் அமையும்.

தகுதி / தரம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அனைத்தையும் உள்ளடக்கி, அத்தகுதியை பிறப்பில் வைத்ததே பார்ப்பனீயம் செய்த அருஞ்சாதனை!!!

எனது பிறப்பு எனது தகுதி அடிப்படையில் அமையாதபொழுது பிறப்பிற்க்கு பின்னாலான எனது வாழ்வு ஏன் எனது பிறப்பை ஒட்டி முடிவு செய்யப்படும் என்ற அளவில் தான் எனது கேள்விகள் கேட்கப்பட தொடங்கியது......

எங்கள் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்துகொடுத்த மீனாட்சியக்காவின் கூலியை கொடுத்த எனது அம்மா அவர்களின் கைகளை தொட்டுவிடாமல் அந்த 5 ரூபாயை கொடுத்ததை பார்த்து ஏன் என்ற கேட்ட எனக்கு சொல்லப்பட்டது "அவுங்க கீழ் ஜாதிப்பா" 

அதே என் அம்மாவின் கைகளைப்பிடித்து சென்ற கோயில்களில் எனக்குத்தரப்பட்ட பிரசாதங்கள் எனது கைகளை நோக்கி தூக்கி வீசப்பட்டபொழுதும் எனக்கு சொல்லப்பட்டது " அவுங்க ஒசந்த ஜாதி" 

இரண்டையும் புரிந்து கொண்ட மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்த அந்த வயதில், "நான் ஐயராக மாறிவிடலாமா என்று என்று புரட்சியாக யோசித்து பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் மொழியாக இருந்த தமிழைத்துறந்து "சமஸ்கிருதம்" படித்தேன்.  

அப்படி சம்ஸ்கிருதம் படித்து பாஸான பிறகும் எனது பிரசாதங்கள் கோயில்களில் என்னை நோக்கி வீசத்தான் பட்டது!!!

எனது  ஜாதிய அடையாளம் தேவைப்படாத அல்லது ஜாதி மூலமாக எனக்கு கிடைக்கவிருந்த மேற்படிப்பு தேவையில்லை என்று " ஓட்டல் மேனேஜ்மெண்ட்" கல்லூரியில் சேர்ந்தேன்!! இட ஒதுக்கீடு என்று மேல் ஜாதியினர் போடும் பிச்சை எனக்கு தேவையில்லை என்று ஒரு எதிர்ப்பு, 

இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல எனது உரிமை என்று புரியவே வெகு நாட்களானது. 

எனது மொழி மற்றும் சாதி அடையாளங்களை கடந்து செல்ல காதல் திருமணமே சரியானது என்று முடிவு செய்து, அதுவும் எனது மொழியைச்சாராத பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து திருமணம் செய்தேன்.

எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி/ மத / மொழி / இன தாக்கங்களே இல்லாத பெயர்களை வைத்தேன். 

ஆனால் அவர்களுக்கு ஜாதி/மதம்/இனம்/மொழி அனைத்தையும் சொல்லிக்கொடுத்தேன் அதை ஏன் அவர்களின் தந்தை எதிர்க்கிறான் என்பதையும் புரியவைத்தேன். 

இவையெல்லாவற்றையும் நான் எதோ ஒரு புரிதலில் செய்து கொண்டுதானிருந்தேன்....

ஆனால் மிக மெதுவாகத்தான் பெரியார் தான் எனக்கு புரியவைத்தார் மீனாட்சியக்காவை தொடாத எனது அம்மா கூட நவீன பார்ப்பன சிந்தனையாளர் தான் என்று...... 

எனவே பார்ப்பனியத்தை எதிர்ப்பது மட்டுமே எனது அரசியல்,எனது கொள்கை,எனது வாழ்வியல் முறை என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டுள்ளேன். 

என்னைப்புரிந்து கொள்ள முடிந்தால் நலம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட நலமே!!!!

09/09/2017 FaceBook 

Monday, June 15, 2020

“இந்த பூமி செத்துவிட்டது”

அண்ணன் Murali Appas மிக அழகாகச் சொல்வார், இறைவன் படைப்பிலேயே அழுகிய ( Rotten Stage) நிலையில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது இந்தப்பூமிப்பந்துதான்...

அதற்கு அவர் கூறும் காரணம், அழுகிய பழத்தை எடுத்துக்கொண்டால் கூட அதில் இருந்து நீர் உற்பத்தியாகும்.

உற்பத்தியான நீரில் இருந்து பேக்டீரியாக்கள், ஃபங்கஸ் முதலிய உயிரினங்கள் தோன்றும் அதுபோல உருவானவன் தான் மனிதன் எனவே உறுதியாகச் சொல்கிறேன் நாம் ஒரு அழுகிய / அழுகிக்கொண்டிருக்கும் பிரபஞ்சப் பழம் என்பார்.

இதை ஒரு உவமையாக எடுத்துக்கொண்டால் கூட நிஜம் நமது பிடரியில் அடித்து உண்மையைச் சொல்லும்.

ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, கடல் உள்வாங்குகிறது, பனி மழைகள் உருகுகின்றது, புவி வெப்பமயமாகிறது என்கின்ற வார்த்தைகளையெல்லாம் கடந்த 10 - 15 வருடங்களுக்குள்ளாக அனைவரும் மிக அதிகமாக கேட்டிருப்போம்....

பூமி உண்மையில் அழியப்போகிறதா......?

என்கின்ற கேள்வி கடந்த “10-12 வாரங்களில்” மிக அதிகமாகவே கேட்டுக்கொண்டிருக்கிறது.

காரணம் “கொரோனா வைரஸ் “

என்ன தான் நடக்கிறது என்கின்ற அனுமானித்தலுக்குள் சென்றால் கூட நமக்கு எளிதாக புரியும் சமாச்சரம் என்னவென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை.....

“நாம் நடக்கும் பாதையில் யானைகள் நடப்பதில்லை, நாம் தான் யானை நடக்கும் பாதையில் நடக்கின்றோம்”

இந்த சின்ன எடுத்துக்காட்டைப் புரிந்துக்கொண்டால் காட்டை அழித்தது யாரெனப் புரியும்.

மனிதன் மிகக்கொடியவன்,

இறைவன் படைத்ததிலேயே மிக உன்னதமான உயிர் தான் தான் என்று தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு,

தனக்கான தேவைகளுக்காக, தனது இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக நியாய தர்மங்களை உருவாக்கிக்கொண்டு, அதற்கு முட்டுக்கொடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை அமைத்துக்கொண்டு இன்று எல்லா உயிரனங்களுக்கும் பேராபத்தை உருவாக்கி வைத்திருக்கின்றான்.

இயற்கையாக உள்ள எல்லாவற்றையும் அழித்து ஒழித்து அதன் மீது தனது அகந்தையையும் (ஈகோ) அந்த அகந்தை உருவாக்கித் தந்த அறிவையும் வைத்து இயற்கையின் மீது புதிய உலகம் கட்ட முயற்சித்தான்.....

இயற்கை ஒவ்வொரு முறையும் அவனை எச்சரித்தது.....

பெரியம்மைக்களும், பெரும் பஞ்சங்களும், நில நடுக்கமும், கடல் கொந்தளிப்பும், பசியும் பட்டினியும் என பல முறை எச்சரித்தது......

இவை எல்லாவற்றிற்கும் எதிராக எதோ ஒன்றைக்கண்டு பிடித்து நொடி நேர வெற்றியடைந்ததாக காட்டிக்கொண்டான்.....

இயற்கை மனிதனை விட பிடிவாதமானது.....

இயற்கையாக அவனுக்குப் புரியாததை செயற்கையாகவும் கூட அவனுக்கு எச்சரிக்கை செய்தது.....

உலகப்போர்கள், சர்வாதிகாரிகள், அணுவைப்பிளந்த அறிவியல்வாதிகள், என அவன் வழியில் சென்றே அவனை எச்சரித்தது.

மனிதன் மகா கர்வக்காரன்.....
பல மோடிக்களையும் ஹிட்லர்களையும் டிரம்ப்புகளையும் பார்த்தவன் அல்லவா....

அவன் அசரவில்லை......

நான் அன்பானவன் என்றான், புத்தனையும் ஏசுவையும் தனது சாம்பிள்களில் ஒன்றாக காண்பித்தான்.

மறைகள் , விவிலியங்கள், கீதைகள் எழுதித்தீர்த்தான் மனிதன்.....

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை உள்ளவர்களை பெற்றுப்போட்டான்.....

விலங்குகள் மீது ஆர்வமுள்ளவர்களை உருவாக்கினான்....

ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம் என்றான் ஓசோனைக்காப்போம் என்றான்....

இயற்கையை ஏமாற்றினான்....

இயற்கையும் சரிக்கு சமம் நின்று எதிர்த்தது மனிதனை.....

மனிதன் தன் முன் ஒன்றுமேயில்லை என்ற உண்மை அதற்கு தெரிந்தாலும், தன்னைப்போல அழுகிய ( Rotten ) கிரகத்தை இப்படி உயிர்வாழ் உலகமாக்கியவன் மனிதன் தானே என்கின்ற நன்றிக்கடனில் அவனுக்கு நல் புத்தி மதிகள் சொன்னது.....

மனிதன் இயற்கையைத் தாண்டியதாக உணரத்தொடங்கிய பின்பு புத்திமதிகள் அவனது ஆசன வாயிலைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பர்களாகின....

வெறுத்துப்போன உலகம் மீண்டும் அவன் வழியேலேயே சென்று இனி நீ இன்னொரு மனிதனுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் தாண்டி தன் மூக்கையோ வாயையோ கூட தொடக்கூடாது அப்படிச் செய்தால் நோய் தொற்றிச் சாவாய் அதற்கு பெயர் கொரோனோ வைரஸ் என்றது....

மனிதன்
எப்பொழுதும் போல்
சற்று பயந்தது போல் நடிக்கிறான்.....

ஆனால் மனிதன் மீண்டு மீண்டும் வருவான் ஏனென்றால் இயற்கைக்கே இயற்கையான மரணத்தை
உருவாக்கியவன் மனிதன்.

நம்பிக்கை என்கின்ற ஒற்றைப் பலத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் முடிவு பெறாது....

இவன் இந்த பூமியை அழிக்காமல் இவன் அழியமாட்டான் எனவே

“இந்த பூமி செத்துவிட்டது” என்று பெரிதாக ஒரு போர்ட் மாட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போய் விடுவான் மனிதன்..

பாவம் பூமி!!!!!


Thursday, May 07, 2020

ராதா அம்மா


மே 5, 2019  

கமல் கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கனும்டா தம்பி…… என்று தொலைபேசியில் என்னைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம், அம்மா லூஸா நீ ? அவர் கூட எப்ப வேணாலும் போட்டோ எடுக்கலாம், ஒண்ணும் பிரச்சனை இல்லை.


 இப்போ எலெக்சன் நேரம், பாவம் அவரு ரொம்ப பிஸியா இருக்காப்ல! முடிஞ்ச உடனே எடுக்கலாம் என்று போனை கட் செய்து விட்டேன்.

மனசு கொஞ்சமா கஷ்டமா இருந்துச்சு, பாவம் இது வரைக்கும் அம்மா கேட்டு ஒண்ணுஞ்செய்யல…….. கமல் சார் கூட ஒரு போட்டோ தான கேக்குது சரி கேட்டுறுவோம்னு, மூர்த்தி அண்ணனுக்கு உடனே போன் அடிச்சேன். மூர்த்தி அண்ணே, எங்கம்மாக்கு சார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்! எடுக்கலாமான்னு……..?

என்ன சத்யா நீங்க…… யார் யாருக்கோ போட்டோ எடுக்க நீங்க டைம் வாங்கி கொடுக்குறீங்க, நம்ம அம்மாக்கு டைம்மா? சார் கிட்ட கேட்டுருவோம், ஒண்ணும் சொல்ல மாட்டாரு, வரச்சொல்லுங்க, காலைல சீக்கிரமா போட்டோ எடுத்துருவோம்.

சரிங்க அண்ணே, காலைல ஒரு தடவ உங்களுக்கு போன் அடிச்சுட்டு அப்புறமா வரச் சொல்றேன்.சரிங்க சத்யா என்று மூர்த்தி அண்ணே தொடர்பை துண்டித்தார்.

மீண்டும் அம்மாவுக்கு அடிச்சேன், அம்மா நாளைக்கு காலைல சார் கூட போட்டோ எடுத்துடலாம், இன்னிக்கு ஃபுல்லா திருப்பரங்குன்றத்துல பிரச்சாரத்துல இருந்ததால டயர்டா இருக்காப்ல….

அதனால காலைல சீக்கிரமா எந்துருச்சீட்டீங்கன்னா, ஒரு 7 மணி போல கெளம்புனா கரெக்டா இருக்கும் ஓட்டலுக்கு வர அப்படின்னேன்…..

யய்யா தம்பீ ஒன்னும் பிரச்சனை இல்லையே ? பாவம் நாம போயி டிஸ்டர்ப் பண்ணமாதிரி இருக்கக்கூடாதுன்னு அம்மா சொல்ல, அதுலாம் ஒண்ணும் இல்ல,

காலைல பிஸியா இருந்தா நானே சொல்லிடுறேன், எப்படியும் திரும்பி 15 மே மதுரை வருவாப்ல அப்ப கூட எடுத்துக்கலாம்.நீங்களும் அப்பாவும் ரெடியா இருங்க நான் போன் அடிக்கிறேன்.

சரிப்பா, சாப்டியா நீயி……?

சாப்டேன் சாப்டேன்…

வீட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டு போயிருக்கலாம்ல? அம்மா தோச சுட்டு குடுத்துருப்பேன், துணிமணி தொவச்சு போட்டுறுப்பேன்…
அம்மா லூசாம்மா நீ, இங்க ஓட்டல்ல எல்லாமே இருக்குமா, லாண்டரில துணி தொவச்சு கொடுத்துருவாய்ங்க, ரொம்ப டென்சன் எடுக்காதம்மா?

பேசாம தூங்கு, காலைல ஃப்ரெஷ்ஷா எந்திருக்கனும், போட்டோல அழகா இருக்க வேணாமான்னு சிரிச்சுகிட்டே கேட்டேன்.

 என்னத்த அழகா இருந்து…. கமல சின்னப்புள்ளைல நேர்ல பாத்தது இப்போ இத்தன வருசம் கழிச்சு பாக்கப்போறேன் அதுவே சந்தோசமா இருக்கு.


சரிம்மா தூங்கு காலைல அடிக்கிறேன் என்று போனை வைக்க, அதே நேரத்தில் காலிங் பெல் அடிக்க, ஓட்டல் ரூம் கதவைத் திறந்தால் சுகாசினியும் நண்பர் வெங்கடேசும் நின்று கொண்டிருந்தனர்.


அண்ணே டின்னருக்கு போகலாமான்னு சுகாசினி கேட்க,


ரைட்டு கெளம்புவோம்னு சொல்லிட்டே, அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்,ரொம்ப நாளா நம்ம சார் கூட போட்டோ எடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க அதான் நாளைக்கு வரச்சொல்லி இருக்கேன் என்றேன் சுகாசினியிடமும் வெங்கடேசிடமும்,


அப்படியா அண்ணே சூப்பர்ணே!!! காலைலயே சீக்கிரமா வந்துட்டா பிரச்சன இல்லாமா போட்டோ எடுத்துறலாம்னு சுகாசினி சொல்லுச்சு……

ஆமாம்மா, எங்கம்மா எங்கிட்ட கேட்டு நான் எதும் செஞ்சதே இல்ல…..

அம்மாக்கு நான் டாக்டர் ஆகனும், ஆனா நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சேன்,

அம்மாக்கு நான் மதுரைல இருக்கனும், ஆனா நான் சிங்கப்பூர் போயிட்டேன்,

எனக்கு அவுங்க சொந்தத்துல ஒரு பொண்ணு பாத்து வச்சு இருந்துச்சு, அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணனும் ஆனா நான் லவ் மேரேஜ்.


இப்படி சின்ன மேட்டரோ பெரிய மேட்டரோ அது சொன்னத செஞ்சதே இல்ல…

ஆனா இப்போ கமல் சார் கிட்ட வேலை பாக்குறேன்னு சொன்னவுடனே அதுக்கு ரொம்ப சந்தோசம்…….

நான் சொல்லாமலே எனக்கு புடிச்சத இப்பத்தான் எம்மகன் செஞ்சுராக்கான்னு எங்கப்பாகிட்டயும் என்னோட தங்கச்சிகிட்டயும் சொல்லிக்கிட்டே இருக்காம்….

அவன கடேசி வரைக்கும் கமல் கூடவே இருக்கச் சொல்லுன்னு என் தங்கச்சி கிட்ட சொல்லிருக்காம்.

அவ்ளோ புடிக்குமாண்ணா உங்க அம்மாக்கு கமல் சார்னா ந்னு சுகாசினி கேட்டுச்சு,

ஆமம்மா, புடிக்கும்ன்றத தாண்டி கமல் சார் ஃபேமிலி, எங்கம்மா ஃபேமிலி எங்கயோ நெறைய காண்ட்க்ட்ல இருந்துருக்காங்க…… 

“கமலு” இந்தப் பெயர் எங்களது வீட்டில புழங்கும், எங்களுக்கு உரிமையான பெயர்.

பரமக்குடி போயிட்டா எங்க அம்மாச்சி வீட்ல அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்.

இந்தா உங்க சித்தி பத்மா, ஹாசினி (சுகாசினி மணிரத்தினம்) கூடத்தான் படிச்சா, அவுங்க அக்காவோட டான்ஸ் ஸ்கூல்ல டான்ஸ் கத்துக்கனும்னு தான் சகுந்தலா பெரியம்மா துடியா துடிச்சுக்கிட்டு கெடந்தா…

இப்படி பல நிகழ்வுகள் மூலமா, கமல் சார் எங்க வீட்டுப்புள்ளையாவே இருந்துருக்காரு.


ஆனா என்ன, நான் எங்க சொந்த பந்தத்துக்கூட ரொம்ப அன்னியோனியமா இல்ல, அதனால எனக்கு யாரையுமே பெருசா தெரியாது… கதையா நெறய கேட்டுறுக்கேன் அவ்ளோதான்….

இப்ப திரும்பி இந்தியா வந்தப்ப கூட எங்கம்மாக்கு கொஞ்சம் கோபம் தான், இப்படி சிங்கப்பூர விட்டுட்டு வந்துட்டானேன்னு, எவன் பேச்சயும் கேக்க மாட்டான், அவனா முடிவெடுப்பான், அவனா எல்லாத்தையும் செய்வான், அவனா தப்பு செய்வான், அவனா சரி செய்வான்.

என்னமோ இப்ப, எப்படியோ போயி, கமலஹாசன் கிட்ட  சேந்துட்டான், புத்தி கித்தி மாறிப்போயி  “கமல விட்டுட்டும் போயிடப்போறான்னு” சொல்லிகிட்டே இருக்கு….


அது தான், சரி ஒரு தடவ அம்மாவ கமல் சார் கூட போட்டோ எடுத்துக் கொடுத்துட்டேன்னா, என்னோட பெத்த கடன் முடிஞ்டும்னு சிரிச்சுகிட்டே சொன்னேன். சாப்பிட்டு முடிச்சுட்டு அப்படியே தூங்கப்போயிட்டேன்.  

மே 6, 2019 

கரெக்டா அலார்ம் மாதிரி எங்கம்மா அடிச்சுறுச்சு.

தம்பி நாங்க ரெடியாயிட்டோம்….

 நீ எப்ப சொல்றியோ அப்ப கார எடுத்துட்டு வந்துரோம்.

சரிங்கம்மா நானும் இங்க கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்.

சரின்னு குளிச்சி முடிச்சுட்டு ரெடி ஆகி, கமல் சார் தங்கிருக்கிற ஓட்டல் போனா அங்க அதுக்குள்ள கூட்டம் கூடியிருந்துச்சு.

என்னடா இது சத்ய சோதனைன்னு யோசிச்சுட்டே இருக்குறப்ப, மூர்த்தி அண்ணே கரெக்டா வந்து, வாங்க சத்யா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுடுவோம்னு ரெஸ்டாரண்ட்டுக்கு நடந்து போனோம்.

ஒரு 10 பேரு இருக்காங்க சார் கூட போட்டோ எடுக்குறதுக்கு, ஒவ்வொண்ணா முடிச்சு விட்டுருவோம் அப்படின்னு மூர்த்தி அண்ணே சொல்லிகிட்டு இருக்கப்பையே,

எனக்கு சரி இன்னிக்கு போட்டோ எடுக்க அம்மாவ வரச்சொல்ல வேணாம்னு தோணிடுச்சு.

10 பேரு கூட போட்டோ அப்புறம், சார் தேர்தல் பிரச்சாரத்துக்கு கெளம்பனும், நமக்கும் வேலை இருக்கு. அம்மா அப்பா வந்தா, எப்படியும் ஒரு ½ மணி நம்மால வேற எந்த வேலையும் செய்ய முடியாது அதனால இன்னிக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கைகழுவிகிட்டு இருந்த மூர்த்தி அண்ணே கிட்ட போயி, அண்ணே இன்னிக்கு அம்மாவ கூப்புட வேணாம், சார் திருப்பி 15ம் தேதி மதுரை வர்றார்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்…

மூர்த்தி அண்ணே சிரிச்சுகிட்டே உங்க இஷ்டம் சத்யா எப்ப வேணா கூப்பிடுங்க…. நம்ம அம்மாவன்னார்.

சரிங்க அண்ணேன்னு சொல்லிட்டு அம்மாக்கு அடிச்சேன்,

அம்மா இன்னிக்கு முடியாதும்மா. கொஞ்சம் கூட்டமா இருக்கு 15 மே திருப்பி வர்றாப்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்.

சரிப்பா, சரிப்பா ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்றப்பையே லைட்டா அம்மா சோகமான மாதிரி இருந்துச்சு……

சத்யா இன்னிக்காவது வீட்டுக்கு வருவியா? பிரச்சாரம் முடிஞ்சு? இல்ல இன்னிக்கும் ஓட்டலான்னு? அம்மா கேட்க,

இல்லம்மா இன்னிக்கு நைட்டு சென்னை போறேன், 7 & 8 சென்னை, 9 ம் தேதி சூலூர், அப்புறம் 15 திருப்பி திருப்பரங்குன்றம் பிரச்சாரம். 15 வேணா வீட்டுக்கு வந்துடுறேன்னேன்…

சரிப்பா, ஒடம்ப பாத்துக்க,

புள்ளைங்கள பத்திரமா பாத்துக்க,

கண்ட்த கழியத சாப்புடாத……

கோபப்படாத, முக்கியமா கெட்ட வார்த்தைய கொறச்சுக்க,

கமல் மாதிரி ஆள் கூட இருக்கப்ப கெட்ட வார்த்த பேசுறது நல்லா இருக்காது அப்புறம்……

அப்படின்னு எதோ சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள,

யம்மாயம்மாயம்மா விடும்மா விடும்மா வேல இருக்கு அப்புறமா பேசுறேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டேன்.

 மே 6, 2019 பிரச்சாரம் முடிஞ்சு, நைட்டு சென்னை பயணம், 7ம் தேதி ஆபிஸ் போயிட்டு நைட்டு சீக்கிரம வந்து தூங்கிட்டேன்.  

மே 8, 2019

காலைல முரளி அப்பாஸ் அண்ணே எப்போதும் போல 6.30 மணிக்கெல்லாம் போன் அடிச்சு பேசிகிட்டு இருக்காரு, பின்னாடி எங்கப்பா இன்னொரு ”கால்” ல வர்றாரு,

அண்ணே திருப்பி அடிக்கிறேன்னு சொல்றதுக்குள்ள, என்னோட இன்னொரு நம்பருக்கு அப்பா வந்துட்டாரு,

என்னங்கப்பான்னு கேட்டேன், அம்மாக்கு திடிர்னு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு, அப்போலோல சேத்துருக்கோம். நீ கொஞ்சம் மதுரைக்கு வர்றியான்னு ஒரு மாதிரி ஒடஞ்சு போயி கேட்டாரு….

ஒண்ணும் புரில சரின்னு கெளம்பிட்டேன்.

ஃப்ளைட் ஏறி உக்காந்த உடனே போன், பக்கத்து வீட்டு அக்கா கிட்ட இருந்து “சத்யா சாரி அம்மா could not sustain” இறந்துட்டாங்கன்னு……

ஆஸ்பத்திரி போயி சைன் போட்டு, அம்மாவ வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தங்கச்சிக்கு போன் அடிச்சு, எல்லா வேலைய முடிச்சுட்டு சாயந்திரமா அப்பா பக்கத்துல உக்காந்து இருக்கப்ப

“கமல் சாரோட ஃபோன்”  என்ன சத்யமூர்த்தி அப்படின்னு….. விசயத்த சொல்லிட்டு இருக்கப்பவே,

ரெண்டு நாள் முன்னாடி தான் அம்மா ஃபோட்டோ எடுக்கனும்னு சொன்னாங்களாமே, கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானேன்னு……. கமல் சார் கேக்க…….

தெர்ல சார்,

கமல டிஸ்டர்ப் பண்ணாதடா, அவரு ஃப்ரியா இருக்கப்ப எடுப்போம்னு சொன்னாங்க சார், அப்படின்னு அழுகக்கூட தெரியாம சொல்லிட்டே இருந்தேன்……

 “என்னிக்கு இவன் என் சொல்லு பேச்சு கேட்டு இருக்கான்னு” அம்மா சிரிச்சுகிட்டே எங்கப்பா கிட்ட சொல்ற மாதிரியே ஒரு சவுண்ட் கேட்டுச்சு அசரீரியா இல்ல என்னோட குரலான்னு எனக்கே சந்தேகமா இருந்துச்சு..


Thursday, April 30, 2020

எதிரிகளைத் தேடித் தீர்ப்போம் வா....

உங்களுக்கான எதிரிகளை தேர்ந்தெடுங்கள்;
அவர்களை வெறுப்பதற்கான காரணங்களை கண்டுபிடியுங்கள்;

எதிரிகளின் எதிரிகளை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்;
எதிரிகளின் நண்பர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்;

எதிரிகள் பேசும் கருத்துகளை கவனியுங்கள்;
அவற்றில் இருக்கும் பிழைகளை பெரிதாக்குங்கள்;

எதிரிகளின் வரலாற்றை படியுங்கள், அதை உங்களுக்கானதாக மாற்றி எழுதுங்கள்;

எதிரிகளின் கொள்கைகளை கேளுங்கள், அவை ஆபத்தானது என்று பதிவு செய்யுங்கள்;

வாழும் வரை எதிரிகள் தேவை,

எனவே வளர வளர எதிரிகளை மாற்றிக்கொள்ளுங்கள்;

எதிரிகள் தவறு செய்யும்பொழுது அமைதியாக கவனிப்பது போல வேடிக்கை பாருங்கள்.

எதிரிகள் தோல்வி அடையும் பொழுது உண்மையாகவே வருந்துவது போல நடியுங்கள்.

அடிக்கடி எதிரிகளை அடிக்காதீர்கள்;

ஆனால் எப்பொழுதும் “முதல் அடியும்,இறுதி அடியும் “ உங்களுடையதாய் இருக்கும் படி கட்டமைத்துக்கொள்ளுங்கள்,

அதே நேரத்தில் அந்த அடி “அன்பினாலானதாய் “ இருக்கும்படி வடிவமைத்துக்கொள்ளுங்கள்.....

கொ.பி. 2020 களின் ஏப்ரல் மாதக்காலங்களில் வெளிவந்த 
“எதிரிகளைத் தேடி 
தேர்ந்தெடுத்துத் தீர்ப்போம் “ என்கின்ற போஸ்ட் பேண்டமிக் புத்தகத்திலிருந்து.......

(விரைவில் கிண்டலில்/ Soon In Kindle .......)

Tuesday, March 03, 2020

சொர்க்கஞ்செல்லும் சூட்சமம்

மோட்சமது பெறுவதற்குச் சூட்சமஞ் சொன்னேன் 
கேள்.... 

பாவமென்றேதுமில்லை அடித்துச்சுவைத்துண்ட பின் அனைத்தும் 
பசிக்குணவே.... 

வணக்கத்துக்குறியவனென்றெவனுமிலை 
உனைத்தவிர 
தினமும் கோவின் உள் செல்...

நீயே “கோ”...... 

சகப்ராணியிடம் 
காமத்தைத் தள்ளி 
காதல் கொள்ளாதே..... காமமேயியற்கை.....

வெற்றியென்றொன்றுமிலை 
உனது 
செயலனைத்தும்
இயக்கமேயிப்பிரபஞ்சமுமியக்கமே 
வெற்றிதோல்வி அதற்கல்ல....

சித்தமும் 
யோகமும் 
தவமும் 
ஞானமும் ஒன்றுமில்லை....
"ஒன்றுமில்லை" மட்டுமே 
உண்டு 
உணர்!! 

பாவபுண்ணியமேதுமில்லை ஆகின்
மோட்சமது பெறுவ தற்குச் சூட்சமமென்றேதுமில்லை
மல்லாக்கப்படுத்துப்பார்
சொர்க்கமதுவே...... 

Thursday, December 19, 2019

ஒழுக்கம் - ஆண்பாலா பெண்பாலா அல்லது பிறர்பாலா?

மிக ஆளமான பண்பாட்டையும், நாகரீகத்தின் உச்சகட்டத்திலும், கலாச்சார செறிவும் நிறைந்த 
இந்த இந்திய தேசத்தில் பிறந்து வாழ்ந்து சாவது என்பது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரும் சவால்! 

ஏனெனில் இந்த நாட்டையும் மண்ணையும் நதியையும் பெண்ணிற்கு ஒப்பிடுவார்கள், 

அதே நேரத்தில் பெண்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கும் வசிப்பதற்கும் இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கும்.

இந்த புண்ணியபுமி சக்தியின் மறுவடிவம் என்பார்கள் ஆனால் மாதவிடாய் என்று காரணம் காட்டி கோயிலுக்குள் விடமாட்டார்கள். 

நல்லவேளை, பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களின் “ஆண்குறிகளை” வெட்டிவிட வேண்டும் என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் இந்த புண்ணிய தேசத்தின் நல்லவர்கள் பேச்சைக் கேட்டிருந்தால்

கலாச்சார மகிமையும் மாட்சிமை தாங்கிய இந்த இந்திய மண்ணில்த  உலகின் மிகப்பெரிய “ஆண்குறி பொருட்காட்சி”  அமைந்திருக்கும்.

“போட்டுத்தள்ளுங்கடா” அந்த பொம்பளப்புள்ளைய்ங்கள ரேப் பண்ணவைய்ங்கல ந்னு சொல்ற பல பேரு, கையை அவசரமாக தூக்கும் பெண்ணின் அக்குளையும் கொஞ்சமாக தெரியும் இடுப்பு சதையையும் “ வெறிக்க “ வெறிக்க” பார்க்கும் உத்தமர்கள் தான். 

எப்படி டிரெஸ் போட்டுகிட்டு போறா பாரு, அப்புறம் இவளுங்கள் ரேப் செய்யாம ஆரத்தியா எடுப்பாய்ங்க? என்று என்று அறிவுப்புழுதியைப் பறக்கடித்து பேசும் புத்திசாலிகள் தான்.

இவர்கள் தான் இன்று 4 ரேப்பிஸ்ட்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கொண்டாடி மகிழ்கிறார்கள். 

தனிமனித ஒழுக்கத்தில் இருந்து பிறழ்ந்து அதை மூடி மறைக்க கூட்டுப்பிரார்த்தனைக்கு கோயிலுக்கும், சர்ச்சுக்கும் போன அதே கூட்ட்

தனக்கு ஆண்பிள்ளை பிறந்தவுடன் “ சிங்கம்லே, எம்மவன் ஆம்பளடா, என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு,

அந்த சிறுவயதிலேயே அச்சிறுவனின் நெத்தியில் “சுன்னியை” முளைக்க வைக்கும் தாய் தந்தையர்களுக்கு இருக்கும் அதப்புக்கும்,

“ நீ பொம்பளப்புள்ள” சீக்கிரமா வீட்டுக்கு வரனும், மொனங்கால் தெரியாம டிரெஸ் போடனும்னுசொல்ற அம்மா அப்பாவுக்கு இருக்கும் அச்சத்திற்கும்

Thursday, July 04, 2019

மறுக்கப்பட்ட ஆப்பிள்!!!

ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ, பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம் –தந்தை பெரியார்

கற்பு,காதல்,கலாசாரம்,ஒழுக்கம்,புனிதம், புண்ணாக்கு இப்படி ஏகப்பட்ட திரிவுகளாய் நம் வரலாறு முழுக்க, நம் சமூகம் முழுக்க, வாழ்க்கை முழுக்கத் திரித்துப்போயிருக்கின்றனர் ஏகப்பட்ட ஒழுக்க சீலர்கள்,இப்படிப்பட்ட ஒழுக்க சீலர்களின் போதனைகளை பற்றியே நமது சமூகம் அதீதமாக கவலைப்படுகிறது.

பல நேரங்களில் இவற்றை பாதுகாப்பதிலும்,பாதுகாவலர்களாக இருப்பதிலும், நாம் மனித நேயத்தையும் மறந்து,உடல் ரீதியான,வெறும் இனப்பெருக்க உறுப்புகளின் வழியான ஒழுக்கங்களை மட்டுமே ஒழுக்கங்களாக வரையறுத்து,அதையே சமூக ஒழுக்கமாக நிர்ணயிக்கவும் செய்து இங்கு தீர்ப்பெழுதுகிறோம்.

இப்படிப்பட்ட மதிப்பீடுகளால் அடிமைத்தனமும்,அறிவுத்தடையுமே ஏற்ப்படுமேயன்றி வேறொன்றுமில்லை.அதுவும் பெரும்பான்மையாக இவை குறிப்பிட்ட ஒரு(பெண்) பாலினத்திற்க்கான வரையறையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.ஆண்களை ஒத்த பாலியல்விருப்பங்களையும்,முயற்சிகளையும்,மீறல்களையும் அல்லது இயல்பான,இயற்கையான பாலுணர்வு விருப்பங்களை வெளிப்படுத்தும் பெண்களை ஒழுக்கமற்றவர்கள் வரிசையில் முதன்மைப்படுத்துவது கலக்கத்தையே தோற்றுவிக்கிறது.கலாச்சாரத்தளங்களிலான மீறல்கள், அந்த மீறல்களை முன்னெடுக்கும் மனிதர்களை மிக முக்கியமாக அவர்கள் பெண்களாக இருப்பின் அவர்களை விபச்சாரியை விட கேவலமான ஒரு நிலையில் நிறுத்தி விமர்சித்தல் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடாகவே இருக்கிறது. அந்த கலாசார மீறல்களினால் ஏற்ப்படும் அதிர்வுகளை சந்திக்கவியலாத புரட்சியாளர்களை உள்ளடக்கியதாகவே இச்சமூகம் இருக்கிறதுமறைபாதைகளிலூடான பயணங்களில் இருந்து வெளி வந்து, வெளிச்சத்திற்க்கு வந்து,சரி நிகர் சமமாக நிற்க்கும் சில பல பெண்களையும் நரகலை விட அசூசையாக கருதுவது எந்த வித கருத்தியலுக்குட்ப்பட்டது என்பது விளங்கவில்லை.

இந்நேரத்தில் பெண்ணிய கருத்துக்களை,பெண்ணுடலை பாடுபொருளாக,பாலியல் கருத்தை முன்னெடுக்கும் பெண்களுக்கும் சில விசயங்களில் புரிதல் வேண்டும்.பெண்கள் எந்த விதமான ஆடைகளும் போடலாம்,எதையும் பாடுபொருளாக கொள்ளலாம் தவறு இல்லை இருப்பினும் நம்முடைய சமுதாயமும் நமது மக்களும் அந்த விசயங்களை ஏத்துகொள்ளகூடிய மன நிலைக்கும் அந்த பக்குவத்திற்க்கும் இன்னும் வந்து விட்டார்களா...... என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும்.ஒரு சமுதாயத்தில் எப்பொழுதும் முன்னோக்கி சிந்திப்பவர்கள் பைத்தியகாரர்களாக அடையாளப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இன்னும் பக்குவப்படாத ஒரு சந்தையில் அந்த சந்தைக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்தை செய்வது என்பது மிகுந்த ”அபாயமிக்கது”.இந்த சந்தைபடுத்துதலில் உள்ள அபாயத்தின் பின் விளைவுதான் நமது சமுதாயத்தில் பெண்கள் விசயத்தில் ஏற்ப்படும் பல விதமான விமர்சனங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம்.இதிலிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்சனையையும் கவனத்திலெடுப்பது இங்கு தவிர்க்கவியலாது,என்னவெனில்,பெண்கள் ஆடையில் இருந்து அரசியல் வரை எல்லாவற்றிலும் ”தீர்மானிப்பது” என்பது என்னவோ ஆண் தான்.நன்மை/தீமை,சரி/தவறு,பாவம்/புண்ணியம் முதலான விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை பெரும்பான்மையாக இன்னும் ஆண்களிடமே இருக்கின்றது.எனவே இச்சமுதாயத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் ஆண்களின் கருத்தியலுக்குட்ப்பட்டும்,அனுமதிக்கும்,புரிதலுக்கும் உட்ப்பட்டே எடுக்கப்படுகின்றது. இங்கே நமது சமூகத்தில் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர்.


”தீர்மானிக்கும்” (எந்த விசயத்தையும்) இடத்தில் பெண்கள் என்றும் இருந்ததில்லைஎந்த பெண்ணாவது தனியாக சிந்தித்து தனது கருத்தை தனது கருத்தாகவே.....வெளியே சொல்ல கூடிய சுதந்திரம் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் அனுமானிக்க முடிகிறது.அப்படியே வானத்திற்க்கு கீழான ஏதாவது ஒரு விசயத்தை பற்றி பேசினாலோ,எழுதினாலோ அது இந்த ஆண் சமூகத்தின் மூளைக்கு ஏற்ற கருத்தாகவோ,அதனால் அங்கீகரிக்கப்பட்ட கருத்தாகவோ அல்லது ஆதரிக்கப்பட்ட கருத்தாகவோ அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய கருத்தாகவோ இருக்க வேண்டியது அத்தியாவசியமாகிவிடுகிறது. வீட்டில் சாதாரண பெண்களிடம் அவர்களின் தந்தை,சகோதர்ர்கள்,கணவன்கள் மூளையாகவோ அல்லது நீதிவான்களாகவோ இருக்கின்றனர்.வெளியே ஆண் முதலாளிகளால் சாதாரண பெண்களில் இருந்து பெண்ணியம் பேசும் பெண்கள் வரை, பெண் உடை வடிவமைப்பாளர்களில் இருந்து பெண் ஊடகவியலாலர்கள் வரை வெறும் ஏவலை செய்யும் வேலைக்கார்ர்களாவே பயன்படுத்தபடுகிறார்களே தவிர சக விலங்காக யாரும் கருதவில்லைஇன்றைக்கு இருக்கிற முதலாளித்துவ நுகர்வு கலாசாரத்துக்கான சந்தையில் தங்கள் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கான பொருட்க்களை தீர்மானிப்பதற்கான உரிமை கூட தனி மனிதர்களுக்கு மறுக்கப்பட்டு வெகு காலமாகிவிட்டது.இருப்பவைகளில் சந்தைபடுத்தப்பட்டவைகளில் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே நமது கைகளில் விடபட்டுள்ளது.நிலமையிப்படியிருக்க,இன்றைக்கு பெண்ணிய கருத்துக்களை கூட பெண்கள் தீர்மானிக்கவில்லை. அது ஆண்களால்,ஆண் முதலாளிகளால் தங்கள் விருப்பப்படி தயாரிக்கப்படுகிறது.பெரும்பாலும் ஆண்களின் உணர்வுகளுக்கு மறைமுகமாக தீனி போடும் வகையில்தான் பெண்ணிய கருத்துக்களும் நிறுவப்படுகிறது. அதை எழுதுவதும்,பதிவதும் அதையே பெண் விடுதலை என்று பேச வைப்பதும் முதலாளித்துவம் மட்டுமே அதை பெண்ணியம் என்று பேசுபவர்கள் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் மட்டுமே.எனவே பெண்ணியவாதிகள் தங்கள் கருத்துக்களை சந்தைப்படுத்தும் முன்,சற்றே இவை பற்றிய அதீத எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது மிக அத்தியாவசியமாகிறது.எவ்வாறு ஆங்கிலம் பேசுவதற்க்கு முன்னர் நமது மூளை தமிழில் சிந்தித்து பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பின் ஆங்கிலத்தில் பேசுகிறதோ,அதே போல பெண்களும் முதலில் பெண்ணிய கருத்துக்களை கூட ஆணாதிக்க மன நிலையில் இருந்து சிந்தித்து பின் அதை பெண்களுக்கான மொழியாக மொழி பெயர்த்து பின் அதை தமது கருத்தாக சொல்லும் சூழலே இருக்கின்றது.இதுபோலில்லாமால்,மனோரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெண்கள் பெண்களாக சிந்திக்க வேண்டும்.அதில் மிக கவனமாகவே இருக்கவேண்டும்.


ஏனெனில் சந்தைபடுத்தப்படும் ”பெண்களுக்கான கருத்தியலில்” இருக்கும் ”மறைமுக ஆபாசத்தை” ”நியாயபடுத்தும்” கருத்தியலை கட்டமைத்த பிறகே இது போன்ற கருத்துக்களை ஆணாதிக்க முதலாளித்துவ சமூகம் அறிமுகம் செய்கிறது.


தவிர சாதியரீதியில் ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு சாராரின் குமுறலின் ஒரு வடிவமாக ஒலிக்கும், ”அடங்க மறு”,”அடித்து நொறுக்கு”!!போன்றதான ஒரு அடக்கப்பட்ட பல நூற்றாண்டு வெம்மையின் கொப்பளங்களாகத்தான் இந்த குறியீட்டு இலக்கியங்களையும் குற்றச்சாட்டுக்களையும் நான் பார்க்கிறேன்


எதையெல்லாம் பாவம் என்று கற்பிக்கப்பட்டதோ அதையெல்லாம் சகட்டுமேனிக்கு உடைத்தெறி!!! என்ற அடங்கா கோபம்,பழிக்கு பழி வாங்குதல் போன்ற கீழ் நிலையிலான ஒரு போக்குத்தானே தவிர வளர்தல் அல்லது அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக இதை கண்டிப்பாக பார்க்க முடியாது!!!


இத்தகைய வெம்மையின்,வெறுப்பையுமிழ்வதின் காரணம் என்ன?சமூகத்தின் எந்த பழிக்கு இந்தப் பதில்?என்பவற்றை நாம் மிக கவனமாக நோக்க வேண்டும். ... கேவலமான.சமமில்லாத,சுயமில்லாத ஒரு இருப்பை பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.அவள் தனக்காக தன்னை நிலை நாட்டிக்கொள்ளவும்,சுயநிர்ணயம் செய்துகொள்ளவும், சமூகத்தின் ஒருதலைப்பட்சமான ஒழுக்க விதிகளை மீறவும்,மீட்பு பெறவும் விரும்புகிறாள் என்பதையே பெண் இத்தகையதொரு வன்மத்தின் செய்தியாக சொல்ல விரும்புகிறாள்.


இத்தனையாண்டுகள் பெண் தன் அழகின் இரகசியங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதிலும், தனது ”கற்புத் தன்மையை நிரூபிப்பதிலுமே” அதிக சந்தோசம் கொண்டவளாக இருந்திருக்கிறாள்,அப்படிப்பட்ட பெண்டிரை தலை மேல் தூக்கிவைத்து கொண்டாடிய நாம் இன்று சிலர் ”கற்பை துச்சமாக்கியதும்” அவர்களை துவெஷிப்பது ஆதிக்க மனப்பான்மையா அல்லது ஒழுக்கத்தின் பாலான நமது கண்டிப்புத்தன்மையா???

இலக்கியத்தை விற்பனை பொருளாக்க பெண்ணுடல் பற்றிய வர்ணனைகள், மிதமிஞ்சிய ஒரு சூழலில்,அதே யுக்தியை பெண்களே கையிலெடுப்பதை சகித்துக்கொள்ள முடியாத மன நிலையையே பெண்ணுடல் சார்ந்த்த பெண்ணிய எழுத்துக்களின் எதிர்ப்புக்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா???


அதே நேரத்தில், நம் சமூகத்தில் பெண்ணியம் என்பது பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவதற்க்கான விடுதலை என்றும், எதிர்பாலினத்தின் அதிரடி கவனயீட்டினை பெறுவதற்க்காக தனக்கோ,தனது உடலியலுக்கு சற்றும் ஒவ்வாத உடையலங்காரங்களை அணிவதும்,சிகரெட்,மது மற்றும் இன்ன பிற போதை வஸ்துக்களை உட்கொள்வதற்க்கான சுதந்திரம் என்றும், தாங்கள் விரும்பும் அளவிற்கு,பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் என்றும் தவறாக அர்த்தப்படுத்தி கொள்கின்றனர்.


என்னைப்பொருத்தவரை, தமிழீழப் பெண்கள் எட்டியுள்ள விடுதலையானது மனித வரலாற்றிலேயே எங்கும் காணவியலாத மிக முக்கிய சாதனையாகும்.தமிழீழப் பெண்கள் போர்க்களத்தில் ஆண் வீர்ர்களுக்கு இணையாக நின்று யுத்தம் செய்த்திலாகட்டும்,வல்லரசுகளால் தயாரிக்கப்பட்ட இராணுவத்தை தமது சுய நிர்வாகத்திறன்,ஆளுமை மற்றும் யுத்த யுக்திகளை கொண்டு தம்மக்கள் விடுதலையோடு பெண்ணின விடுதலைக்கும் எடுத்துக்காட்டாக நின்ற தன்மையாகட்டும்,புலத்திலும், தங்களது சுயபலத்தை,மிகுந்த புத்திசாதுரியத்துடன் விடுதலைக்காக தமது மக்களை இன்னும் தயார்ப்படுத்துவதிலும்,துணையாகவும் இணையாகவும் இருப்பதில் தாங்கள் இயலாமையுடையவர்கள் என்றோ, புத்திசாதுரியம் அற்றவர்கள் என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்துள்ளனர்இத்தகையதோர் முன்னெடுப்பே நிதர்சனமான பெண்ணியமாகும்.

பொருளாதாரநோக்கத்திற்காக ”உடலை” ”பாலியலை” விற்கின்ற செயலானது எப்படி எந்தவிதமான பெண்விடுதலையையும் ஈட்டித்தராதோ அதே போல்,பொருளாதார நோக்கத்திற்காக விற்க்கப்படும் பெண்ணுடல் சார்ந்த்த இலக்கியங்க்களும் எவ்வித விடுதலையும் ஈட்டித்தராது என்பதில் ஐயமில்லை.

ஆணின் பாலியல் வக்கிரத்திர்க்கு எதிர்வினையாற்றும் பெண் பாலியல் வக்கிரமேயன்றி பெண்ணிய விடுதலைக்கான முன்னெடுப்பு அல்ல!!!


நமது சமூகம், சமத்துவம் நோக்கிப் பயணப்படாதவரை, ஆதிக்க சிந்தனை அறுபடாத வரை, பாலியல் உணர்வு பண்படுத்தப்படாதவரை, இந்த நிலைப்பாடு மனிதனின்(இருபாலரின்)மனநிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும.

எல்லாவற்றிற்க்கும் மேலாக சமூக தளத்திலும்,கலாச்சார தளத்திலும் பாலினம் கடந்ததொரு சூழல் அமையப்பெறும் பொழுதுதான் மறுக்கப்பட்ட ஆப்பிளின் தத்துவமறிவோம்.

NO FREE WILL!!!

The most Dignified Error of Human Being is to give away God, the free will.  

#CupidBuddha


என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று கடவுளுக்கு கொடுத்த சுதந்திரம் தான் இந்த மானுடச்சமூகம் செய்த மாபெறும் தவறு.
#Satyalogy

Sunday, October 23, 2016

புன்னகையில் சரவெடி.......

இன்றிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி...

ஒரு 10 கிலோ ஸ்வீட் வாங்கி கையில் வைத்துக்கொள்ளுங்கள்....

உங்கள் தெருவின் முனையில் கூடை நிறைய பூ விற்றுக்கொண்டிருக்கும் பூக்காரப்பெண்மணியின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்...

உங்கள் தெரு குப்பையை அள்ளும் கார்ப்பரேசன் ஊழியரின் பிள்ளைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

உங்கள் கிழிந்த துணிகளை தைத்துக்கொடுக்கும் அந்த எளிமையான டெய்லரின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்...

தினமும் அயர்ன் செய்து கொடுக்கும் உங்கள் அபார்ட்மெண்டின் அயர்ன்காரரின் பிள்ளைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

நீங்கள் அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் தெருவோர செருப்புத்தைப்பவரின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

மீதமிருக்கும் 5 கிலோ ஸ்வீட்டை இதுபோன்று உங்களைச்சுற்றியுள்ள எளிய மனிதர்களை நீங்கள் பார்க்கும்பொழுது அவர்கள் கையில் கொடுத்து புன்னகை பரிமாற்றம் செய்வோம்....

தீபாவளிக்கு விளக்குத்தான் ஏற்றவேண்டுமா என்ன.... சிலரின் உதடுகளில் புன்னகையைக்கூட ஏற்றலாமே...??


Sunday, September 04, 2016

NEET-நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு -ஒரு பார்வை!!!!


(தேசிய அளவிலான தகுதி அறி நுழைவுத்தேர்வு) (National Eligibility Cum Entrance Test - NEET) 



"நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா" அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது!!!! 

இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்க்கு ஒரே பொதுவான நுழைவு தேர்வு நடைபெறும். 

எதற்க்காக NEET ??? 

1,மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், 
2,கட்டாய நன்கொடையை ஒழிக்க வேண்டும், 
3,தகுதி (Merit) அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அமைக்க வேண்டும், 
4,மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக, ஏராளமான நுழைவுத்தேர்வுகளை எழுதும் கொடுமையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் – இந்தக் காரணங்களைக் கூறியே ‘நீட்’ நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
   
மேலோட்டமாக இதை பார்த்தால்  மிகச்சரியானதொரு முடிவாக இருக்கும், ஆனால் இதில் இருக்கும் உள்ளீடுகளைப்பார்த்தால் மிக நுண்ணிய அரசியல் சதி வலை பின்னப்பட்டிருப்பதை நாம் அறியலாம். 

தமிழ்நாட்டில் அமையப்பெற்றிருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS ல் 85% மும் ,MD படிப்பில் 50% மும் 
நுழைவுத் தேர்வுகள் ஏதும் இல்லாமலே மாநில அரசின்  +2 மதிப்பெண் 
அடிப்படையில் நம் தமிழக மாணவர்களுக்கே கிடைக்கும்படியான ஒரு எளிதான தேர்வு முறையை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்!!! 

இதன் மூலம், ஏறக்குறைய  தமிழகத்தில் இருக்கும் 3000 மருத்துவ கல்லூரி இடங்களின் 2500 இடங்களுக்கு மேல் நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கே  கிடைத்துக் கொண்டிருந்தது, அதாவது 260 
மாணவர்களில் ஒருவர் மருத்துவ படிப்பை பெற முடியும். 

NEET  தேர்வு முறையால் தமிழ்நாட்டிற்க்கும் தமிழக மாணாக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!!! 

* குறையும் வாய்ப்புகள்:- 

ஆனால் NEET என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், தமிழகத்தின் ஒரு மாணவன்/மாணவி  ஒரு மருத்துவ கல்லூரி இடத்திற்க்காக இந்திய முழுவதிலிருக்கும் ஏறத்தாழ 3000 மாணவர்களுடன் போட்டியிட வேண்டும்.  

* போட்டித்தேர்வா??? தகுதி அறியும் தேர்வா??? 

நீட்’ நுழைவுத்தேர்வில் ஒரு குறிப்பிட்ட  ”குறைந்தபட்ச” மதிப்பெண்ணை பெற்றால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கே தகுதி பெற முடியும். ஒரு போட்டித்தேர்வை (Competitive Examination), தகுதி அறியும் தேர்வாகவும் (Qualifing Examination) மாற்றுவது சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் பாதிக்கும். 


* மாநில கல்வித்திட்டத்தின் கேள்விக்குறி:- 
மத்தியக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழ்நாடு கல்வி வாரியம் மூலம் படித்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். 


* அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை  

‘நீட்’ நுழைவுத்தேர்வை முதுநிலை மருத்துவக் கல்வியில் திணித்தால், அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவர். தொடர்ந்து மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்யும் அவர்களால், ‘நீட்’ தேர்வில் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெற முடியாமல் போகலாம். இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வது குறைந்து விடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். இது அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய நோயாளிகளைப் பாதிக்கும். 

இந்த மருத்துவ நுழைவு தேர்வு AIIMS, 
ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவ மனைகளுக்கு கிடையாது,தமிழகத்தில் 
AIIMS மற்றும்  ஜிப்மர் மருத்துவமனைகள் இல்லை!!! 

ஜிப்மரில் உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 1.35 லட்சம் மாணவர்களும், 3085 அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்களும் , எய்ம்ஸ் – மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 682 இடங்களுக்கு 80 ஆயிரம் மாணவர்களும் கடந்த ஆண்டு போட்டித்தேர்வு எழுதினர் 

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நமது தமிழக மாணவர்கள் 1995முதல் 2012 வரை வெறும் 6 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 
இது மிகவும்கவலைக்குறிய ஒரு தகவலாகவே நாம் பார்க்க வேண்டும். 
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைகேடுகளைத் தடுக்கவே நீட் என மத்திய அரசு கூறிக்கொள்கிறது.ஆனால்,முறைகேடுகளை வளர்க்கும் வகையில் அண்மையில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு,மாநில அரசுகள், சொசைட்டி அல்லது டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்புகள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட , தனியார் கம்பெனிகளும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வழிவகுக்கும் அறிவிக்கை 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் ,மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான ``தகுதிகள் குறித்த ‘’ பிரிவில் , இதற்கான புதிய சரத்து சேர்க்கப்பட்டது. இருப்பினும், தனியார் கம்பெனிகள் மருத்துவக் கல்லூரிகளை வணிகநோக்கில் நடத்தினால் , அக்கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும் என விதி முறை 1 ல் சரத்து 6 ன் மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.எனவே, லாபமீட்டும் நோக்கில் செயல்படும் பெரிய கம்பெனிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட தயக்கம் காட்டின. இந்நிலையில், இப்பொழுது, இந்த விதிமுறையை நீக்கிட வேண்டும் என மத்திய அரசு இந்திய மருத்துவக் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, ``வணிக நோக்கில் செயல்பட்டால் , மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்’’ என்ற பிரிவை மத்திய அரசு நீக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.ஒருபுறம் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுத்திட,முறைகேடுகளைத் தடுத்திட நீட் எனக் கூறும் மத்திய அரசு ,மறுபுறம், அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவது கேலிக்கூத்தாக உள்ளது.

இந்தியா முழுவதும், பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், வாரியங்கள்,ஏற்றத்தாழ்வான தரமுடைய கல்விநிறுவனங்கள்,என பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்ற ஒரு சூழலில் இது போன்ற ஒற்றைப்படையான தேர்வு முறையை எவ்வளவு தான் நியாயப்படுத்தி பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தாலும் அது சமூக அநீதிக்கே வழிவகுக்கும். 
தவிர மாநிலங்களுக்கான உரிமையை கையகப்படுத்தும் வகையில் ஜி.எஸ்.டி, கொண்டு வருதல்,சமஸ்கிருதம் மற்றும் இந்தியை வலியத்திணிக்கும் செயல் என்று தொடர்ச்சியாக இந்திய இறையாண்மைக்கும்,பன்முகத்தன்மைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய விசயங்களையே செய்து கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் விசமத்தனமான கொள்கைக்கு மற்றுமொரு திட்டம் தான் “NEET” தேர்வு முறை என்றே சொல்லலாம். 

தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும் மாநில சுயாட்சிக்கும் போராடி வருவதாக கூறி வரும் திமுக இந்த “NEET”ஆதரிப்பது தான் மிகக்கேவலமானது.

Wednesday, August 17, 2016

சத்-சித்-ஆனந்தம்

எனக்கு 
காசுகொடுத்து
புணர்வதில்
கம்ப்யூட்டரின்
மெய்நிகராய்
புணர்வதில்
இயக்கமாய்
வெறும்விந்தை 
வெளியேற்றும்
வித்தையில்
அச்சப்புணரலில்
அவசரப்புணரலில்
ஆவேசப்புணரலில்
அகந்தைப்புணரலில்
ஆசைகாட்டிப்புணரலில்
இப்படி
எப்படி
புணரினினும்
அது
எனக்கு
புணர்ச்சியேயில்லை,
புணர்ச்சிக்கு
முந்தையதொரு
காலமும்,
புணர்ச்சிக்கு
பிந்தையதொரு
காலமும்,
புணர்தாலாய்
நாமிருவரும்
மாறிய
அந்த ஒருநிமிட
காலமும்,
எனக்கு
அதீத
காதலையும்
அளவற்ற
காமத்தையும்
தருகிறது!!!
அஞ்ஞானமும்
மெஞ்ஞானமும்
விஞ்ஞானமும்
சத்-சித்-ஆனந்தமாய்
சங்கமிக்கும்
வா
அந்நொடியினை
தேடி
கண்டறிவோம்

காமப்பித்ததில் காதல்யுத்தம்!!!

சொல்லப்படாத
எனது
காதலை 
நீ புரிந்துகொள்ள 
முயற்சிக்க வேண்டாம்
உணர்ந்து கொள்!!!
போதும்!!!

உணர்ந்து கொண்ட 
காதலை என்னிடம்
கதைக்க
கவலை கொள்ளாதே
உன் 
உடல் மொழி
போதும்!!!

கட்டாயப்படுத்தி 
காதலை திணிக்க
காதல்
என்ன கசக்கும்
மருந்தா??

காமப்பித்தத்தை 
தலைக்கு ஏற்றி 
வெறும்
வாந்தியாய்
வெளியேற்றும்
காதல்
என்ன அவ்வளவு
புனிதமானதா??

காமத்தை கொண்டு 
காதலை மறைக்கிறோமா
அல்லது
காதலைக்கொண்டு
காமத்தையா????

காரணம்

ஈர்ப்பை
தொலைத்த 
மனம்
நிராகரிப்பை
தயாரிக்கும்

Friday, August 12, 2016

யார் இந்த ஜக்கி வாசுதேவ்....???

யார் இந்த ஜக்கி வாசுதேவ்???

தியான குருவா???
ஆன்மீக குருவா???
கார்ப்பொரேட் குருவா????
யோக குருவா????
செக்ஸ் குருவா.....??

இறை நம்பிக்கையில் உள்ள ஒரு ஆகப்பெரிய அரசியலை முதலில் நாம் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும்,

முதலில் பார்ப்பனர்கள், கோயில்களை தங்களின் ஏகாதிபத்திய சொத்துக்களாய் வைத்திருந்தனர்.

பின்னர் அவற்றை தமிழகத்தில் பெரியார் முன் வைத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த சமூகசீர்திருத்தவாதிகள் அவற்றை சமத்துவமாக அனைவரும் சென்று வர தகுதியான இடமாக கோயில்களை மாற்றியமைத்தனர்!!!

ஆகம விதிகளுக்கு எதிராக இவ்வாறான அபச்சார நிகழ்வுகளுக்குப்பிறகு பார்ப்பனிய ஆதிக்க சக்திகளின் ஒரே வருமான வழியான "ஆண்டவன் பெயர் சொல்லி ஆட்டையைப்போடும்" தொழிலுக்கு பங்கம் வந்து விட்டது!!!

அடுத்து எப்படி தங்கள் தொழில்வளர்ச்சியைப்பெருக்கலாம் என்ற அனேக திட்டமிடலுடன் இவர்களுக்கு தோன்றிய அபரிதமான ஒரு வடிகால் தான் " தியானம், ஆழ்நிலை தியானம், யோகா போன்ற லாஹிரி வஸ்துக்கள்!!!

அமெரிக்க அடிமைகளாகவும் ஒயிட்காலர் கூலிகளாகவும் மாறிவிட்ட கார்ப்பொரேட் மனிதப்பதர்களின் பயமுறுத்திகளாக  இருக்கும் மன உளைச்சல், தூக்கமின்மை, மறதி போன்றவைகளை இன்ஸ்டண்டாக தீர்க்கவல்ல இரு நொடி மேஜிக் நூடுல்ஸ் போல யோகா மற்றும் தியானங்கள் மாறியன.

இவற்றை கையகப்படுத்தி உடனடியாக  தாங்கள் காசு பார்க்க நினைக்காமல் தொலைநோக்குப்பார்வையுடன் ஒரு கொடுந்திட்டத்தை தீட்டினர்!!

சில பல அரைகுறை அறிவாளிகளை, இம்மாதிரியான நாலுநொடிகளில் ஞானம் அடையும் வழியையும், குறைந்த நேரத்தில் குண்டலி எழுப்பும் வேலையையும் செய்வதற்க்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இந்த இன்ஸ்டண்ட் இலுமினியாட்டிகளின் தொழிலும் சிறப்பாக நடைபெற்றது!!

இங்கனம் செவ்வனே சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில் தான்,இவர்களை பல ஜில்ஃபான்ஸ் வேலைகளைப்பற்றிய பல செய்திகள் வெளியாகத்தொடங்கியது!!!  
இந்த ஜாதி இந்துக்களால் தொடங்கப்பட்ட பல்வேறு ஆன்மீக ஆசிரமங்களின், பார்ப்பனியரல்லாதோரின் பஜனை மடங்களில் நடைபெற்ற பல லீலாவிநோதங்கள் இன்று வெளி வரத்தொடங்கியுள்ளது!!!( இதன் பிண்ணனியில் கூட இந்த ஐயர்களின் கூட்டுச்சதி இருக்க வாய்ப்பிருக்கிறது) 

மக்களுக்கு இந்த சாமியார்களின் மீதுள்ள மோகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிய விரைவில் வடிந்து முடிந்து விடும்பொழுது அவர்கள் முன் இருக்கும் ஒரே ஆபத்பாந்தவன் ஆண்டவனும்,அவனுக்கு மட்டுமே சேவகம் செய்யும் சாந்தஸ்வரூபியான இந்த ஐயர்கள் மட்டும் தான்!!!

இப்படியே காலச்சக்கரம் மீண்டும் ஒரு சுற்று சுற்றி, கடவுள் பயம் காட்டி வயிறு நிரப்பும் இந்த களவானிக்கூட்டத்தின் கை ஓங்கும்,
பின் மீண்டும் ஒரு நாள் ஜாதி இந்துக்கள் கோயில் வாசலிலே நின்று விடுவார்கள்!!!

இதனால் இத்தமிழ்ச்சமூகத்திற்க்கு சொல்ல வருக் கருத்து யாதெனில், 

பரமாத்மா ஒன்றும் பரத்தையல்ல இடையில் கமிசன் பெற்றுக்கொண்டு ஐயராலோ அல்லது பரமாத்ம குருவால் கூட்டிக்கொடுப்பதற்க்கு......

உனது உணவு,உனது உடை,உனது கைமதுனம் போலவே கடவுளும் உனது அந்தரங்கப்பேரின்பம்,
கூட்டமாக (mob activity) சென்று செயல்படுத்தும் கேங் ரேப் (gang rape) அல்ல!!!

இறை எனும் உணர்வை நீ தனியாக சென்றுத்தான்  அடையமுடியும் தவிர அதை பெறுவதற்க்கான அனைத்து தகுதிகளும் உரிமைகளும் உனக்குள் இருக்கிறது, எனவே கடவுள் எனும் கருத்தைக்காட்டி பயமுறுத்தும் இந்த ஐயர்களும், ஜக்கி, நித்யா போன்ற ஆன்மிக தொழிலதிபர்களும் நமக்கு தேவையில்லை, 
நமக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒரே  ப்ரபஞ்ச மந்திரம் 
"அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி" மட்டும் தான்!!!!

Thursday, August 11, 2016

ஞானக்காமம்..........

புணர்ச்சியின் உச்சக்கடேசி
அந்த இறுதி நொடியில் 
எத்தனை பேருக்கு
கடவுளைக்காணக்கிடைத்தது.....???

துருத்திக்கொண்டிருப்பது 
பிராவின் கூர்மையான துணிப்பந்துதான்
என்பதறிந்தும்
அதையே விறைத்த
முலைக்காம்பாய் எண்ணி
எண்ணக்கலவியை
கண்களால் புணர்ந்து
கொண்டும்தான் சிலர்
இருக்கின்றனர்.

மூத்திரம்
அடிக்கும்பொழுதெல்லாம்
அந்த 
கழிவறைப்புழலில்
எங்கேனும்
எனது 
வாரிசு 
ஒட்டியிருக்கிறதாவென
ஓயாமல்
பார்த்த்க்கொண்டுதானிருக்கிறேனின்றும்!!!!

உள்ளாடைகழற்றும்
பொழுது
கொஞ்சம்
அசூசையாகத்தானிருக்கிறது,
ஆனாலும் 
புணர்ச்சியினுச்சத்தில்
அது கூட அதீத வாசனையாய்த்தானிருக்கிறது.....


உனக்கு மழையிலாட அளவில்லாக்காமம்தான்
எனக்கும் தெரியும் 
"வெளியே போக"
"உனக்கு" அப்படியென்னஅவசரம் 
கொஞ்சம் மெதுவாகவே கூட 
கலவி கொள்ளலாம்-
என அடிக்கொருதடவை
நீயும் சொல்லத்தான் செய்கிறாய்,
ஆனாலும், 
அனேக நேரங்களில்
மழை விரைவாகத்தான்
நின்றுவிடுகிறது......
ஆம்- பூமிக்கும் உனக்கும் கோபம்தான்!!!!!


ஆண்டவன்
சொன்னதாய் சொல்லியதில்மீள்பதிவு
ஒன்றில்தான்
உண்மையாக இருக்கிறது,
ஆடையகற்றிய பின்
அவ்வளவாக காமமுமில்லை
காதலுமில்லை....

பலாத்காரமாக 
விருப்பமில்லாதவரை வதைத்துப்புணர்வதை காட்டிலும் 
சுய இன்பம் 
காண்பது பரமசுகம்!!!!!
 

அநாதைப்புத்தர்!!!

புத்தர் ஏதோ உடம்பை மறைக்க கிடைத்த துணியை எடுத்து போர்வை போல சுத்தி போர்த்திவிட்டார்...

புத்தரை போல ஆக வேண்டும் என நினைப்பபவர்களும் அதே போல உடுத்தி விட்டார்கள்.....

புத்தரின் போதனைகள் அங்கே ஏதோவொரு போதி மரத்தடியில் கேட்பாரற்று அநாதையாக கிடக்கிறது....

புத்தபிட்சுகள் போதிமரத்தை எல்லாக்காடுகளிலும் தேடுகிறார்கள்.....

அவரவருக்குள்ளே ஒவ்வொரு போதிமரமிருக்கிறதென்பதையறியாதவர்கள். !

புத்தரும் பாவம் போதிமரத்திலெப்போதும் 
இன்னொரு புத்தர் இருக்கிறாரா என்று தேடிக்கொண்டேயலைகிறார்!!!
போதனைகளை படிப்பது போதிப்பவரை படிப்பதாகுமா....??
போதிப்பவரை படித்தால் போதனையறியமுடியுமா....
போதனையும் போதிப்பவனும் நீயேயானாலன்றி......????
நீயும் போதனையும் போதிப்பவனும் ஒன்றானால் இனி யாருக்கு போதிக்க.....

கூட்டுப்போதனைகளில் கூட்டமாய் குழுமியிருந்தாலும், தனியே தன்னையே அறிபவன் போதிப்பவனை விட ஒரு நிலை உயர்வாயிருக்கலாம்.....

போதனையும் போதையும் ஒன்றாய் விட்டது..... 

போதிமரத்தடியில் புத்தன்
மதுக்கோப்பைகளுடன்
பேசிக்கொண்டிருந்தான்.... இல்லை 
போதித்துக்கொண்டிருந்தான்....
போதையுடன் போதனைகளைக்கேட்டுக்கொண்டிருந்த
கோப்பைகள் 
புத்தனைக்கொன்றுவிட்டு
போதனைகளை போர்வையாக்கி
புத்தபிட்சுகளாக திரிகின்றனர்...

நீலத்தாலனதொரு....

கனவுகளுடனான
தொடர்பறுந்த
அந்த
அந்திமப்பொழுதில்,
மூளைத்திசுக்களில்
பெருகிக்கிடக்கும்
ஒட்டடைத்தூசிகளை
கருங்கைகளால்
களைத்துவிட்டுக்காணினும்,
நீலத்தாலானதொரு
அருவம்
அசைந்து அசைந்து 
ஆட ஆட....
எண்ணக்குமிழி
நீர்ச்சத்தத்துடன்
நிலைதழும்பி
மூளைமுட்டி
நாக்கைச்சுட்டு
எனைக்கடந்து
எதிர்ப்பட்டதிசைகளிலெல்லாம்
காற்றலைகளின்
தெரியாப்பாதைகளில்
பயணப்பட்டு......
செவிக்கொரு அர்த்தமாகி
சிதிலப்பட்டு
மீண்டுமொரு
அருவமாய்
வெட்டவெளியில்
சிதறிக்கிடக்கிறது...
அவ்வருவமும்
என்னுளிருக்கும் அருவமும்
ஒன்றென்றறிய
இன்னுமொரு
கால்திவசம்
காத்துத்தானிருக்கவேண்டுமென்ற
அயர்ச்சியிலே
அசந்துகிடந்த
அப்பர்பெர்த்திலிருந்து
கீழிறங்கி
விரைவுந்தியின்
சன்னோலரமாக 
அமர்ந்துகொண்டேன்
இறங்க வேண்டிய தூரமின்னும்
குறைந்ததாகத்தெரியவில்லை......மீள் பதிவு